என் மலர்
உலகம்

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழக மாணவிகளை தாக்கிய தலிபான்கள்
- ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது.
- பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு தடை விதித்தனர்.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர்.
பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு தடை விதித்தனர். இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவிகளை தலிபான்கள் தாக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள படாசவுன் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு மாணவிகள் பலர் காத்து இருக்கிறார்கள். அவர்களை பல்கலைக்கழகத்துக்குள் நுழைய விடாமல் தலிபான்கள் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் ஒரு அதிகாரி மாணவிகளை தாக்கி விரட்டியடிக்கிறார். இதனால் மாணவிகள் அங்கிருந்து ஓடுகிறார்கள்.
பர்தா அணியாததால் பல்கலைக் கழகத்துக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் மாணவிகள் அனைவரும் சரியாக பர்தா அணிந்து இருந்தனர். ஆனாலும் அவர்களை வகுப்புக்கு செல்ல விடாமல் தடுத்து விரட்டியடித்துள்ளனர்.
மாணவிகளை தாக்கிய அதிகாரி தலிபான் அரசாங்கத்தின் துணை மற்றும் நல்லொழுக்க அமைச்சகத்தின் அதிகாரி என்பது தெரிய வந்தது.






