search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    வங்கிகள் மூலம் பணம் அனுப்புங்கள்: வெளிநாடுவாழ் இலங்கை மக்களுக்கு அரசு வேண்டுகோள்
    X

    வங்கிகள் மூலம் பணம் அனுப்புங்கள்: வெளிநாடுவாழ் இலங்கை மக்களுக்கு அரசு வேண்டுகோள்

    • அன்னிய செலாவணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்துக்கு இலங்கை தள்ளப்பட்டிருக்கிறது.
    • நேற்று முதல் நாளொன்றுக்கு 3 மணி நேரம் மின்வெட்டு அமலுக்கு வந்து உள்ளது.

    கொழும்பு :

    இலங்கை அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் எரிபொருள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. இதனால் நாடு முழுவதும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. அன்னிய செலாவணி இல்லாததால் புதிதாக எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான ஆர்டர்களை கொடுக்க முடியவில்லை.

    அத்துடன் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருட்களுக்கும் பணம் கொடுக்க முடியவில்லை. ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்காக 800 மில்லியன் டாலர் அளவுக்கு பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டியிருக்கிறது. அத்துடன் இறக்குமதி ஆர்டர் கொடுக்கப்பட்ட எரிபொருளுக்காக 587 மில்லியன் டாலர் தேவைப்படுவதாக இலங்கை எரிசக்தி மந்திரி காஞ்சனா விஜேசேகரா தெரிவித்துள்ளார். பணத்தை தேடுவது ஒரு சவாலாக இருப்பதாக கூறிய அவர், அது மிகப்பெரும் சவாலாக உருவெடுத்து இருப்பதாகவும் கவலை தெரிவித்தார்.

    நாடு முழுவதும் பெட்ரோல்-டீசலுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், 40 ஆயிரம் டன் டீசலுடன் முதல் கப்பல் வருகிற 8-ந்தேதி இலங்கை வந்து சேரும் என அவர் கூறினார். அத்துடன் பெட்ரோல் கப்பல் ஒன்று 22-ந்தேதி வருவதாகவும் தெரிவித்தார். இலங்கைக்கு பெட்ரோல்-டீசல் வழங்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து கடனுக்கு வழங்குவதற்கு தயாராக இல்லை. எனவே அன்னிய செலாவணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்துக்கு இலங்கை தள்ளப்பட்டிருக்கிறது.

    இப்படி எரிபொருள் இறக்குமதிக்காக அன்னிய செலாவணி அதிக அளவு தேவைப்படுவதால் அதை ஈட்டுவது குறித்து அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. ஒரு பகுதியாக வெளிநாடுவாழ் இலங்கை மக்களிடம் மீண்டும் உதவிகளை கேட்டு உள்ளது. அந்தவகையில் தாயகத்தில் உள்ள தங்கள் உறவுகளுக்கு பணம் அனுப்பும் வெளிநாடு வாழ் இலங்கையர்கள், அந்த பணத்தை வங்கிகள் மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொண்டு உள்ளது.

    சுமார் 20 லட்சம் இலங்கை மக்கள் வெளிநாடுகளில் பணியாற்றுவதாக கூறிய மந்திரி விஜேசேகரா, அவர்கள் முறைசாரா நிறுவனங்கள் மூலம் பணத்தை அனுப்பாமல், வங்கிகள் மூலமாக அனுப்பி அரசுக்கு உதவ வேண்டும் என அறிவுறுத்தினார். பெட்ரோல்-டீசல் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் பல துறைகள் முடங்கி உள்ளன. குறிப்பாக பள்ளிகள் மேலும் ஒரு வாரத்துக்கு அதாவது வருகிற 8-ந்தேதி வரை மூடப்பட்டு உள்ளன.

    மேலும் நேற்று முதல் நாளொன்றுக்கு 3 மணி நேரம் மின்வெட்டு அமலுக்கு வந்து உள்ளது. இலங்கையில் நீடித்து வரும் இந்த மின்வெட்டு காரணமாக தொழில்துறை முடங்கி பொருளாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படுவதால் தனியார் வாகன ஓட்டிகள் பெட்ரோல்-டீசல் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதனால் அவர்கள் எரிபொருள் விற்பனை நிலையங்களில் நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. குருணகேலா மாவட்டத்தில் இவ்வாறு எரிபொருளுக்காக காத்திருந்த ஓட்டுனர் ஒருவரை ராணுவ அதிகாரி ஒருவர் கடுமையாக உதைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத்தொடர்ந்து அந்த ராணுவ அதிகாரி மீது விசாரணைக்கு ராணுவம் உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் விமான எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அன்னிய செலாவணி பற்றாக்குறை காரணமாக, இலங்கைக்கான இருக்கை எண்ணிக்கையை விமான நிறுவனங்கள் குறைத்து விட்டன. குறிப்பாக, கடந்த சில மாதங்களில் 53 சதவீத அளவுக்கு இருக்கைகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளதால், ஏற்கனவே தள்ளாடி வரும் இலங்கையின் சுற்றுலாத்துறை மேலும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    Next Story
    ×