என் மலர்
உலகம்

லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
- கிழக்குப் பகுதியில் ரஷியப் படைகளின் புதிய தாக்குதல்களை முறியடித்திருப்பதாக உக்ரைன் தகவல்.
- மேற்கத்திய நாடுகளின் விண்வெளித் துறை, போரை நோக்கிச் செல்வதாக ரஷிய அரசு விண்வெளிக் கழகம் தகவல்
Live Updates
- 11 Jun 2022 9:01 PM IST
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் சிக்கி மரியுபோல் நகரின் டோநெக் பகுதியில் மேலும் 24 குழந்தைகள் உயிரிழந்தனர். ரஷியா உடனான போரில் இதுவரை 287 குழந்தைகள் கொல்லப்பட்டனர். 492 பேருக்கு கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை இறுதி செய்யப்படாதவை என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
- 11 Jun 2022 6:56 PM IST
ரஷிய படைகள் கிழக்கு உக்ரைனைக் கைப்பற்றுவதற்காக முன்னேற முயற்சிக்கும்போது, அதிக அளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் திறன் கொண்ட ஆயுதங்களை பயன்படுத்தலாம் என உக்ரைன் மற்றும் பிரிட்டன் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ரஷிய குண்டுவீச்சு விமானங்கள் 1960-களில் பிரபலமான கனரக கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரைனில் ஏவி இருக்கலாம் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“Kh-22 ஏவுகணைகள் அணு ஆயுதங்களை பயன்படுத்தி விமானம் தாங்கி கப்பல்களை அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகளை தரைவழித் தாக்குதல்களில் பயன்படுத்தப்படும் போது, அவை துல்லியமாக இருக்காது. எனவே கடுமையான சேதம் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும்’’ என பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.
- 11 Jun 2022 6:43 PM IST
ஆக்கிரமிப்பாளர்களின் (ரஷியா) தாக்குதலை தடுத்து நிறுத்த உக்ரைன் துருப்புக்கள் தேவையான அனைத்தையும் செய்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ரஷிய படைகளை எதிர்த்து போரிடுவதற்காக கனரக ஆயுதங்கள், நவீன பீரங்கிகள் ஆகியவற்றை நட்பு நாடுகளிடம் தொடர்ந்து கேட்டு வருவதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
- 11 Jun 2022 1:22 PM IST
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா அந்நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நகரங்களை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதுகுறித்து உக்ரைன் ராணுவ உளவு தலைமை அதிகாரி வாடிம் சிகிபிட்ஸ்கி கூறுகையில், ‘உக்ரைன் கிழக்கு பகுதிகளில் தற்போது பீரங்கி போர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உக்ரைனின் ஒரு பீரங்கிக்கு எதிராக ரஷியாவிடம் 10 முதல் 15 பீரங்கிகள் இருக்கின்றன. இந்த பகுதியில் வெற்றிப்பெறுவது மேற்கத்திய நாடுகளை நம்பிதான் இருக்கிறது. அவர்கள் கூறியதுபோல நவீன ஆயுதங்கள், ஏவுகணைகளை அனுப்பினால் மட்டுமே ரஷிய தாக்குதல்களை முறியடிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
- 11 Jun 2022 4:17 AM IST
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் புறநகரில் ரஷிய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலால் குடியிருப்பு கட்டிடங்கள் தீ பிடித்து எரிந்ததாக கார்கிவ் பிராந்திய அவசர சேவை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. கார்கிவ் நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பியதை தடுக்கும் வகையில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்துவதாக கார்கிவ் மேயர் இஹோர் தெரெகோவ் தெரிவித்துள்ளார். வெடிகுண்டுகள் மற்றும் அதிக சக்தி வாய்ந்த ராக்கெட்டுகளை ரஷிய படைகள் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 11 Jun 2022 3:20 AM IST
உக்ரைனின் தெற்கு மைக்கோலாயிவ் பகுதியில் எரிசக்தி உள்கட்டமைப்பை ரஷிய படைகள் திட்டமிட்டுள்ள அழித்ததாக அந்த பகுதி மின் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டேனில்கிவ் குற்றம் சாட்டியுள்ளார். தொழில்கள், விவசாயம் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு மின்சாரம் அடிப்படை தேவை என்பதால் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து, ரஷிய படைகள் 14 மேல்நிலை மின் இணைப்புகளையும் 377 மின்மாற்றி துணை மின் நிலையங்களையும் வெடிகுண்டு தாக்குதல் மூலம் அழித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 11 Jun 2022 2:30 AM IST
இங்கிலாந்து பாதுகாப்பு மந்திரி பென் வாலஸ், உக்ரைன் சென்றுள்ளார். தலைநகர் கீவ்வில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் உக்ரைன் பாதுகாப்புத்துறை மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் ஆகியோரை அவர் சந்தித்தார். ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான தங்கள் போராட்டத்தில் இங்கிலாந்து அரசு உக்ரைனுக்கு ஆதரவளித்ததற்காக அப்போது ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார். மேலும் இங்கிலாந்திடம் ஆயுத உதவி வழங்குமாறும் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்ததாக அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 10 Jun 2022 10:04 PM IST
மாஸ்கோவில் இளம் தொழிலதிபர்களுடன் நடந்த நிகழ்ச்சியில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இன்றைய சூழ்நிலையில் யாரேனும் எங்கிருந்தாவது வெளியேறினால் அவர்கள்தான் மிகவும் வருத்தப்படுவார்கள். ரஷியா மிகுந்த சந்தை மதிப்பு கொண்ட நாடு. ரஷியாவை விட்டு வெளியேறவேண்டும் என்ற கட்டாயத்தால் பல நிறுவனங்கள் வருந்துகின்றன. சுயமாக முடிவெடுக்க முடியாத நாடுகளின் வெளிப்பாடே இது என்றார்.
- 10 Jun 2022 5:37 PM IST
உக்ரைன் தலைநகர் கீவில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க தொழில் அதிபரும், நன்கொடையாளருமான ஹோவர்ட் பப்பெட் சந்தித்துப் பேசினார். அப்போது, போரினால் சிதைந்துள்ள உக்ரைனை மறுகட்டமைப்பு செய்யவும், கண்ணி வெடிகளை அகற்றவும், பள்ளிக்கூடங்களில் ஊட்டச்சத்து மேம்படுத்தவும் உதவத் தயார் என தெரிவித்தார்.
- 10 Jun 2022 12:09 PM IST
மரியுபோல் நகரில் மருத்துவ சேவைகள் ஏற்கனவே சீர்குலைந்துள்ளதாகவும், தற்போது காலரா பரவி வருவதால் சூழ்நிலை மேலும் மோசமடையும் என்றும் பிரிட்டன் ராணுவ உளவுத்துறை கூறுகிறது.







