search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உடல்நிலை கவலைக்கிடம்: முஷரப்பை பாகிஸ்தான் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்
    X

    உடல்நிலை கவலைக்கிடம்: முஷரப்பை பாகிஸ்தான் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

    • முஷரப் நீண்ட காலமாகவே 'அமிலாய்டோசிஸ்' என்கிற அபூர்வ நோயால் அவதிப்பட்டு வந்தார்.
    • 2016-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் சென்ற முஷரப் அதன் பிறகு பாகிஸ்தான் திரும்பவே இல்லை.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தானில் கடந்த 1999-2008 வரை அதிபராக பதவி வகித்தவர் பர்வேஸ் முஷரப். முன்னாள் ராணுவ மந்திரியான இவர் கடந்த 2007-ம் ஆண்டு நாட்டின் அரசியல் சாசன சட்டத்தை ரத்து செய்து, அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள், மக்களின் போராட்டம் காரணமாக 2008-ம் ஆண்டு முஷரப் அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார்.

    பின்னர் 2013-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட மீண்டும் பாகிஸ்தான் திரும்பினார். அப்போது பெனசிர் பூட்டோ கொலை வழக்கில் முஷரப்பை கைது செய்ய அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தலில் போட்டியிடவும், நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டது. எனினும் உடல்நிலையை காரணம் காட்டி சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு கோர்ட்டில் அனுமதி கோரினார். கோர்ட்டு அனுமதி வழங்கியதால் 2016-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். ஆனால் அதற்கு பிறகு அவர் பாகிஸ்தான் திரும்பவே இல்லை.

    இதற்கிடையில் பாகிஸ்தானில் அவசர நிலையை அமல் செய்த விவகாரத்தில் தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் 2019-ம் ஆண்டில் பாகிஸ்தான் சிறப்பு கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது. இருப்பினும் அந்த தீர்ப்பை எதிர்த்து முஷரப் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த லாகூர் கோர்ட்டு அவரின் மரண தண்டனையை ரத்து செய்தது. இதனிடையே துபாயில் வசித்து வரும் முஷரப் நீண்ட காலமாகவே 'அமிலாய்டோசிஸ்' என்கிற அபூர்வ நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக துபாயில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சூழலில் முஷரப்பின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இது குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், "முஷரப் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவரின் உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டன. அவர் குணம் அடைவது சாத்தியம் இல்லை. அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என கூறியிருந்தனர். இந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் முன்னாள் அதிபர் முஷரப்பை 'ஏர் ஆம்புலன்சு' (விமான ஆம்புலன்சு) மூலம் பாகிஸ்தானுக்கு அழைத்து வந்து, உயர் சிகிச்சை அளிக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், "முஷரப்பை மீண்டும் பாகிஸ்தானுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் குடும்பத்தினரின் சம்மதம் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு செய்யப்பட்டு வருகின்றன. இதில் 'ஏர் ஆம்புலன்சு'ம் அடங்கும். ராணுவம், அதன் முன்னாள் தலைவருக்கு ஆதரவாக நிற்கிறது" என கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×