search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஐரோப்பா வான் பாதுகாப்பில் அமெரிக்காவை சார்ந்து இருக்கக் கூடாது: பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்
    X

    ஐரோப்பா வான் பாதுகாப்பில் அமெரிக்காவை சார்ந்து இருக்கக் கூடாது: பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்

    • ஐரோப்பிய நாடுகளுக்கு வான்வெளி பாதுகாப்பில் சுயசார்பு தேவை
    • பாதுகாப்பு தளவாடங்களிற்காக அமெரிக்காவையே அதிகம் நம்பியிருப்பது தவறு

    ரஷியா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி 16 மாதங்கள் கடந்து விட்டன. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஒத்துழைப்போடு உக்ரைன், ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. இரு தரப்பிலும் பல்வேறு ராணுவ தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதன் பின்னணியில் ராணுவ தளவாடங்கள், அணுஆயுதங்கள் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் பிரயோகம் போன்ற விஷயங்களில் உலக நாடுகள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து பல நாடுகள் சிந்திக்க தொடங்கி விட்டன. குறிப்பாக பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி தங்கள் நாடுகளை முன்னிறுத்தி திட்டங்களை வகுக்க தொடங்கி அவற்றிற்கு ஆதரவும் தேடத் தொடங்கியுள்ளன.

    விமானம் மற்றும் விண்வெளித்துறையை மையமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய நிகழ்வான பாரிஸ் ஏர் ஷோவின் துணை நிகழ்ச்சியாக ஒரு நாள் கூட்டம் ஒன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த பிரான்ஸ் அமைப்பாளர்கள், ஏவுகணை எதிர்தாக்குதல் மற்றும் டிரோன் எதிர்தாக்குதல் மற்றும் அணுஆயுதங்களைத் தடுப்பது ஆகியவை நிகழ்ச்சி நிரலில் இருந்தது என்றும் உக்ரைனில் மாஸ்கோவின் முழு அளவிலான படையெடுப்பு அத்தகைய உபகரணங்களின் முக்கியத்துவத்தையும் செயல்திறனின் அவசியத்தை எடுத்து காட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டனர்.

    20 ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் பிற பிரதிநிதிகளை ஒன்று திரட்டி பாரிசில் ஒரு மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற நாடுகளில் ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் சுவீடன் நாடுகளுடன் உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் ருமேனியா ஆகியவையும் அடங்கும். நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

    இங்கு பிரான்ஸ் இம்மானுவேல் மேக்ரான் ஒரு முக்கிய உரை நிகழ்த்தினார். அவர் ஆற்றிய நிறைவு உரையிலிருந்து சில முக்கிய கருத்துக்கள்:-

    ஐரோப்பிய நாடுகளுக்கு வான்வெளி பாதுகாப்பில் சுயசார்பு தேவை. பாதுகாப்பு தளவாடங்களிற்காக அமெரிக்காவையே அதிகம் நம்பியிருப்பது தவறு. ஐரோப்பியர்கள் தங்கள் சொந்த வான்வெளி பாதுகாப்பு உத்தியை உருவாக்க வேண்டும். நமக்கு இருக்கும் அச்சுறுத்தல் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர், ஐரோப்பியர்களாகிய நாம் எதை உருவாக்க முடியும், நாம் என்ன வாங்க வேண்டும் எனவும் சிந்திக்க வேண்டும்.

    அலமாரிகளில் (விற்பனைக்கு) என்ன இருக்கிறதோ உடனடியாக அதை வாங்குவது தவறு. ஐரோப்பிய பாதுகாப்பு உபகரண உற்பத்தியாளர்கள் சுயாதீன ராணுவ அமைப்புகளை உருவாக்க வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஐரோப்பிய தரம் மிக முக்கியம். அமெரிக்கர்களிடமிருந்து நாம் அதிகமாக வாங்க வேண்டியிருப்பதற்கு காரணம், அவர்கள் தரத்தை மிகவும் மேம்படுத்தியிருக்கிறார்கள், மேலும் அவர்களே தங்கள் உற்பத்தியாளர்களுக்கு மானியங்களை வழங்கும் ஃபெடரல் ஏஜென்சிகளை வைத்திருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மற்றொரு ஐரோப்பிய நாடான ஜெர்மனி மேம்படுத்தப்பட்ட ஐரோப்பிய வான் பாதுகாப்பு திறன்களுக்கான திட்டங்களை வகுத்து வந்தாலும், பிரான்ஸ் அவற்றை வெளிப்படையாக விமர்சித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட, ஐரோப்பிய ஸ்கை ஷீல்ட் எனப்படும் திட்டம், இங்கிலாந்து உட்பட 17 ஐரோப்பிய நாடுகளால் ஆனது. ஆனால் பிரான்ஸ் இதில் பங்கு பெறவில்லை. இது நேட்டோவின் வான்வெளி மற்றும் ராணுவ பாதுகாப்பு திட்டங்களுடன் ஒருங்கிணைக்கப்படும் என தெரிகிறது.

    பெர்லினில், நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் உடன் இணைந்து செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், ஐரோப்பிய ஸ்கை ஷீல்ட் முன்முயற்சியுடன், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், கப்பலில் இருந்து ஏவும் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களுக்கு எதிரான பாதுகாப்பை கூட்டாக அதிகரிக்க ஐரோப்பிய நாடுகளை ஒன்றிணைக்கிறோம்" என்று கூறினார்.

    இந்த திட்டம் "இஸ்ரேலிய ஆரோ 3" அமைப்பை முன்னிறுத்தி தற்போதுள்ள அமெரிக்க பேட்ரியாட் ஏவுகணைகளால் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தன்னுடைய இந்த முன்முயற்சிக்கு பிரான்ஸ் எழுப்பியுள்ள ஆட்சேபனைகள் குறித்து ஜெர்பன் அதிபர் ஷால்ஸ் எதுவும் பதிலளிக்கவில்லை.

    ரஷிய- உக்ரைன் போருக்கு பிறகு பெர்லின் ராணுவ செலவினங்களுக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அறிவிக்கும் வரையில், "பாதுகாப்பு" என்பது இரு நாடுகளுக்கிடையே மீண்டும் மீண்டும் சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்து வந்தது. பல ஆண்டுகளாக ஜெர்மனி இவ்விஷயத்தில் போதுமான அளவு செயல்படவில்லை என்று பிரான்ஸ் குற்றஞ்சாட்டி வந்தது.

    மேக்ரான், "பிரான்ஸ் மற்றும் இத்தாலி இணைந்து உருவாக்கிய 'மாம்பா எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு' இப்போது உக்ரைனில் பயன்படுத்தப்பட்டு, முக்கிய நிறுவல்கள் மூலம் பல உயிர்களை பாதுகாக்கிறது என்றும் பாரிஸ் மற்றும் ரோம் மூலம் உக்ரைனுக்கு விநியோகம் செய்யப்பட்டது" என்றும் கூறினார். மாம்பா அமைப்பு நேட்டோவின் ஒருங்கிணைந்த வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டு போர் தொடங்கியதில் இருந்து மேற்கத்திய ஆயுதங்கள் மற்றும் வளர்ந்து வரும் அனுபவத்தின் உதவியுடன் உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளன. இது உக்ரைனின் உள்கட்டமைப்பு மற்றும் உயிர்களைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், இவ்விஷயத்தில் ரஷியா ஒரு முதன்மை நிலை அடைவதைத் தடுக்கிறது.

    Next Story
    ×