என் மலர்tooltip icon

    உலகம்

    அம்பானிக்கு ஜாக்பாட்.. வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய Reliance-க்கு அமெரிக்கா அனுமதி
    X

    அம்பானிக்கு ஜாக்பாட்.. வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய Reliance-க்கு அமெரிக்கா அனுமதி

    • ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம்.
    • அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பதாக அறிவித்தார்.

    கடந்த மாதம், தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்குள் ஊடுருவிய அமெரிக்க ராணுவம் அந்நாட்டு அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தியது. அவர்கள் மீது போதைப்பொருள் பயங்கரவாத வழக்கு நடந்து வருகிறது.

    இருப்பினும் இடதுசாரி ஆட்சி நடக்கும் வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கைப்பற்றவே அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

    அதை மெய்ப்பிக்கும் வகையில் அமெரிக்க நிறுவனங்கள் தான் இனி வெனிசுலா எண்ணெய் வளத்தை நிர்வகிக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    வெனிசுலாவின் துணை அதிபராக இருந்து அதிபராக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பதாக அறிவித்தார்.

    எனவே இந்தியா ரஷியா, ஈரான் ஆகிய நாடுகளிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு பதிலாக தங்கள் மூலமாக வெனிசுலாவில் இருந்து எண்ணெய் வாங்கலாமே என அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது.

    இதன் விளைவாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என்ற நிபந்தனையுடன் இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

    அமெரிக்கா கூறி வரும்போதும், இந்திய தலைவர்கள் ரஷியாவிடம் எண்ணெய் வாங்கப்படுமா இல்லையா என்பது குறித்து இன்னும் தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை.

    இந்த நிலையில்தான் இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் அனுமதியை அமெரிக்காவிடம் இருந்து பெற்றுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

    வெனிசுலாவிடமிருந்து பல சர்வதேச வர்த்தகர்கள் ஏற்கனவே எண்ணெய் வாங்க அனுமதி பெற்றுள்ள நிலையில், தற்போது இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

    இந்த அனுமதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரிலையன்ஸ் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

    இந்த அனுமதியின் மூலம் ரஷியாவுக்கு அடுத்தபடியாக வெனிசுலாவிடமிருந்தும் இந்தியாவுக்குக் குறைந்த விலையில் எண்ணெய் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    முன்னதாக வெனிசுலாவிடம் இருந்து சீனா அதிகளவில் எண்ணெய் கொள்முதல் செய்து வந்த நிலையில் தற்போது அதன் பிடி அமெரிக்கா வசம் சென்றுள்ளது குறிபிடத்தக்கது.

    Next Story
    ×