search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கடும் உணவு நெருக்கடியில் ஆப்கானிஸ்தான்: 10 ஆயிரம் டன் கோதுமை வழங்கிய இந்தியா
    X

    கடும் உணவு நெருக்கடியில் ஆப்கானிஸ்தான்: 10 ஆயிரம் டன் கோதுமை வழங்கிய இந்தியா

    • இந்த கோதுமை இன்று அந்நாட்டின் ஹெராத் நகரை அடைந்ததாக ஐநா உணவு அமைப்பு தெரிவித்திருக்கிறது.
    • ஆப்கானிஸ்தானில் 90 லட்சம் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியாலும், பசியாலும் வாடுகின்றனர்.

    இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் பொருளாதார சிக்கலின் காரணமாக கடும் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. உணவு பற்றாக்குறையால் தவித்து வரும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு உதவும் விதமாக, இந்தியா சமீபத்தில் 10,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்கியிருக்கிறது.

    தனது டுவிட்டர் பதிவில் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ள ஐ.நா. உணவு அமைப்பு, இந்த கோதுமை இன்று அந்நாட்டின் ஹெராத் நகரை அடைந்ததாக தெரிவித்திருக்கிறது.

    கடந்த மாதம், ஈரானின் சபஹர் துறைமுகம் வழியாக, மனிதாபிமான அடிப்படையில், இந்திய அரசாங்கம் 20,000 மெட்ரிக் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியிருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    முன்னதாக, அந்நாட்டிற்கு பாகிஸ்தானின் நில எல்லை வழியாக இந்தியாவிலிருந்து 40,000 டன் கோதுமை வழங்கப்பட்டது.

    உலக உணவுத் திட்ட மதிப்பீட்டின்படி, தீவிரமான உணவுப் பாதுகாப்பின்மை உள்ள நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்றாகும். அங்கு 90 லட்சம் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியாலும், பசியாலும் வாடுகின்றனர்.

    ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 2021ல் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து, நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து, தினந்தோறும் பயங்கரவாதம் மற்றும் குண்டுவெடிப்பு வழக்குகள் அதிகரித்து வருகின்றன.

    அங்கு பெண்கள் பள்ளிகளுக்கு செல்வதை தடை செய்திருக்கும் தலிபான், கடந்த டிசம்பரில், பெண்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கும், தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் தடை விதித்தது.

    ஆனால், பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்து வருவதால், பிற நாடுகளின் உதவியை அந்நாடு நாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×