என் மலர்
செய்திகள்

இங்கிலாந்து மாநாட்டுக்கு சென்ற இலங்கை அதிபர் கோத்தபயாவை எதிர்த்து தமிழர்கள் போராட்டம்
லண்டன்:
இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள கிளாஸ்கோ நகரில் உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் சர்வதேச பருவ நிலைமாற்ற மாநாடு நடந்து வருகிறது.
இதில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கிளாஸ்கோ நகருக்கு சென்றுள்ளார். அவருடைய வருகைக்கு அங்குள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
2009-ம் ஆண்டு நடந்த இலங்கைத் தமிழர் படுகொலைக்கு காரணமாக இருந்த கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்தனர்.
இதற்காக இங்கிலாந்து முழுவதிலும் இருந்து தமிழர்கள் கிளாஸ்கோ நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் மற்ற வெளிநாடுகளில் இருக்கும் இலங்கைத் தமிழர்களும் அங்கு வந்து குவிந்துள்ளனர்.
கோத்தபய ராஜபக்சே கொலை குற்றவாளி என விமர்சிக்கும் விளம்பர பதாகைகள், லேசர் ஒளி காட்சிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்கள் ஏராளமானோர் திரண்டுள்ளதால் கிளாஸ்கோ நகரில் பதற்றம் நிலவுகிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
கோத்தபய ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் போராட்டங்கள் நடந்தன. கோத்தபய ராஜபக்சே செய்த படுகொலைகள் தொடர்பாக ஸ்காட்லாந்து பத்திரிகைகளிலும் பெரிய அளவில் செய்திகள் வெளியிடப்பட்டு இருந்தன.