search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் அதிபரின் 13 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து மாலத்தீவு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
    X

    முன்னாள் அதிபரின் 13 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து மாலத்தீவு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    நாடுகடந்து வாழும் மாலத்தீவு முன்னாள் அதிபர் முஹம்மது நஷீதுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #Maldivescourt
    மாலே:

    மாலத்தீவில் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்நாட்டின் முதல் அதிபராக பதவி வகித்த முஹம்மது நஷீத், பின்னர் ஆட்சியை பிடித்த அதிபர் யாமீன் அப்துல் கய்யூம் அரசால் பயங்ரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு 13 ஆண்டு சிறை காவலில் அடைக்கப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கு விசாரணை முறையான வகையில் நடத்தப்படவில்லை என உள்நாட்டு ஊடகங்களும், வெளிநாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.

    சில வெளிநாடுகளில் அழுத்தத்துக்கு இணங்கி, உடல்நலக்குறைவுக்காக சிகிச்சை பெற பிரிட்டன் நாட்டுக்கு அவர் செல்ல மாலத்தீவு அரசு அனுமதி அளித்தது. பிரிட்டன் அரசால் அரசியல் தஞ்சம் அளிக்கப்பட்ட முஹம்மது நஷீத் தற்போது இலங்கையில் தங்கியுள்ளார்.

    அவர் நாடு திரும்பினால் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார் என்று தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் முன்னர் அறிவித்திருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் அப்துல்லா யாமீன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட முஹம்மது நஷீத் தலைமையிலான மாலத்தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலியிடம் தோல்வியடைந்தார்.

    58.4 சதவீதம் வாக்குகளை பெற்ற முஹம்மது சோலி வெற்றிபெற்றதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதனால், மாலத்தீவின் புதிய அதிபராக இப்ராகிம் முகமது சோலி வரும் நவம்பர் 17-ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த  பதவியேற்பு விழாவிற்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பயங்கரவாத வழக்கில் முஹம்மது நஷீத் தண்டிக்கப்பட்ட வழக்கு விசாரணை முறையாக நடைபெற்றதா? என்பதை சீராய்வு செய்ய வேண்டும் என மாலத்தீவு அரசின் தலைமை வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்திருந்தார்.



    இதை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட் முன்னாள் அதிபர் முஹம்மது நஷீதுக்கு முன்னர் விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு காவல் துறை மற்றும் சிறை துறை அதிகாரிகள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    நாடுகடந்து வாழ்ந்துவரும் முஹம்மது நஷீத் இன்னும் ஓரிரு நாட்களில் மாலத்தீவுக்கு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் இன்றைய தீர்ப்பு அவரது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பிடத்தக்கது. #Maldivescourt #Nasheedjailtermsuspended #jailtermsuspended  
    Next Story
    ×