search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தூர் தொகுதி
    X
    சாத்தூர் தொகுதி

    அதிமுக- மதிமுக மோதும் சாத்தூர் தொகுதி கண்ணோட்டம்

    அ.தி.மு.க. சார்பில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரனும், தி.மு.க. கூட்டணி சார்பில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த டாக்டர் ரகுமானும், அ.ம.மு.க. சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. ராஜவர்மனும் போட்டியிடுகின்றனர்.
    மாவட்டத்திற்கு விருதுநகர் தலைநகராக இருந்தாலும் சட்டமன்ற தொகுதியாக முதலில் அங்கீகாரம் பெற்றது சாத்தூர்.

    சாத்தூருக்கு மற்றொரு சிறப்பாக பெருந்தலைவர் காமராஜர் போட்டியிட்டு 2 முறை வெற்றி பெற்று முதல் அமைச்சரானார்.

    சாத்தூர் சட்டமன்ற தொகுதி அருப்புக்கோட்டை நகர், சாத்தூர் நகர் மற்றும் 2 யூனியன் கிராமங்களையும் உள்ளடக்கியதாக 2006 வரை இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது சாத்தூர் தொகுதியில் இடம் பெற்று இருந்த அருப்புக்கோட்டை நகர் பகுதி அருப்புக்கோட்டை தொகுதியாக மாற்றப்பட்டது.

    சாத்தூர் தொகுதி

    சாத்தூர் தொகுதியை பொறுத்த மட்டில் காங்கிரஸ் 3 முறையும், பார்வர்ட் பிளாக் ஒரு முறையும், அ.தி.மு.க. 6 முறையும், தி.மு.க. 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

    முக்கியமாக கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் 6 முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இடம் பெற்றிருந்தபோது அமைச்சரவையில் பண்ருட்டி ராமச்சந்திரன் அமைச்சராக இருந்ததால் இவர் சாத்தூர் ராமச்சந்திரன் என அழைக்கப்பட்டார். அதுமுதல் சாத்தூர் ராமச்சந்திரன் என்ற பெயரே நிலைத்துவிட்டது.

    சாத்தூர் சட்டமன்ற தொகுதி மொத்த வாக்காளர்கள் 2,51, 502. ஆண்கள் 1,21,939. பெண்கள் - 1,29.534. மூன்றாம் பாலினத்தவர்- 29.

    தற்போது இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரனும், தி.மு.க. கூட்டணி சார்பில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த டாக்டர் ரகுமானும், அ.ம.மு.க. சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. ராஜவர்மனும் போட்டியிடுகின்றனர்.

    கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் எதிர்க்கோட்டை சுப்பிரமணியன் வெற்றி பெற்றார். இவர் கட்சி மாறியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் 2019-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் ராஜவர்மன் போட்டியிட்டு 456 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது அவருக்கு அ.தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அ.ம.மு.க.வில் சேர்ந்து களம் இறங்குகிறார்.

    சாத்தூர் தொகுதி

    சாத்தூர் நகர் மற்றும் கிராமப்புறங்களில் பெரும்பாலும் தீப்பெட்டி, பட்டாசு தொழில் பிரதான தொழிலாகவும், கிராம மக்களுக்கு வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது.

    எழுதுவதற்கு மை பேனா பிரதானமாக பயன்பட்டு வந்தபோது சாத்தூரில் பேனா நிப் தயாரிக்கும் தொழில் பிரசித்தி பெற்று நடந்து வந்தது. காலப்போக்கில் மை பேனா முக்கியத்துவத்தை இழந்த நிலையில் தற்போது நிப் தயாரிப்பு தொழிலும் நலிவடைந்தது.

    விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் குடிநீர் தேவைக்குதான் முதன் முதலாக நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் இருந்து தாமிரபரணி தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னரே மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் தாமிரபரணித் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டது.

    சாத்தூர் பகுதியில் மிளகாய் வத்தல் வணிகம் மிகவும் பெயர் பெற்று விளங்கியது. எனினும் இன்று குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படாத நிலையே நீடிக்கிறது.

    சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலமாகும்.

    சாத்தூர் தொகுதி

    சாத்தூரில் உள்கட்டமைப்பு வசதியுடன் கூடிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அங்குள்ள மரியா ஊரணியில் பஸ் நிலையம் அமைக்க எடுத்த முயற்சிகள் பலன் தராமல் போய்விட்டது. சாத்தூரில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது. தென் மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு வருவதற்கு பயன்பாட்டில் இருந்து வந்த இந்தப் பாலம் குறுகலாக இருந்ததால் அதற்கு இணையாக புறவெளியில் மற்றொரு பாலம் அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டிய பாலத்திற்கு ஜட்கா வண்டி பாலம் என்ற பெயரும் உண்டு.

    முக்கிய கோரிக்கை

    சாத்தூர் காராசேவு உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இதற்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. முக்கிய கோரிக்கைகளாக விருதுநகர்- சாத்தூர் இடையே சிப்காட் பூங்கா அமைக்கப்பட வேண்டும், இருக்கன்குடி அணையை முறையாக பராமரித்து பாசனத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்த வேண்டும். தீப்பெட்டி தொழில் நலிவடையாமல் இருக்க அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்பதே இந்த தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளன.


    2019 இடைத்தேர்தல்

    ராஜவர்மன் (அ.தி.மு.க. வெற்றி)- 76977
    கோசுகுண்டு சீனிவாசன் (தி.மு.க.)- 76521
    எதிர்கோட்டை சுப்பிரமணியன் (அ.ம.மு.க.)- 12428
    சுரேஷ்குமார் (நாம் தமிழர்)- 5004
    சுந்தர்ராஜ் (மக்கள் நீதி மய்யம்)- 3899

    இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:

    1952- எஸ்.ஆர்.நாயுடு (எ) ராமசாமி (காங்கிரஸ்)
    1957- பெருந்தலைவர் காமராஜர் (காங்கிரஸ்)
    1962- பெருந்தலைவர் காமராஜர் (காங்கிரஸ்)
    1967- ராமசாமி நாயுடு (சுதந்திரா கட்சி)
    1971- அழகுத்தேவர் (பார்வர்டு பிளாக்)
    1977- சாத்தூர் ராமச்சந்திரன் (அ.தி.மு.க.)
    1980- சாத்தூர் ராமச்சந்திரன் (அ.தி.மு.க.)
    1984- சாத்தூர் ராமச்சந்திரன் (அ.தி.மு.க.)
    1989- கருப்பசாமி (தி.மு.க.)
    1991- சாத்தூர் ராமச்சந்திரன் (திருநாவுக்கரசு அணி)
    1996- விஜயகுமார் (தி.மு.க.)
    2001- சாத்தூர் ராமச்சந்திரன் (தி.மு.க.)
    2006- சாத்தூர் ராமச்சந்திரன் (தி.மு.க.)
    2011- ஆர்.பி. உதயகுமார் (அ.தி.மு.க.)
    2016- எதிர்கோட்டை சுப்பிரமணியன் (அ.தி.மு.க.)
    2019- ராஜவர்மன் (அ.தி.மு.க.) இடைத்தேர்தல்
    Next Story
    ×