என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இன்று உலக மீன்வள தினம் - உயிரியல் ஆய்வில் அதிசயம் நிறைந்த மீன் இனங்கள்
    X

    இன்று உலக மீன்வள தினம் - உயிரியல் ஆய்வில் அதிசயம் நிறைந்த மீன் இனங்கள்

    • உலக முதுகெலும்புடைய உயிரிகளின் எண்ணிக்கை 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை என அறியப்படுகிறது.
    • உலக மீன்பிடி உற்பத்தியில் சீனா முன்னணியில் இருந்து வருகிறது.

    உலக மீன்வள, மீனவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந் தேதி இன்று உலகம் முழுவதிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. மீன்வளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதும், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை கொண்டாடுவதும் தான் இதன் முக்கிய நோக்கமாகும்.

    நமது பால்வெளி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட கடலில் உள்ள மீன்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என வியப்பாக சொல்வதுண்டு. உலக முதுகெலும்புடைய உயிரிகளின் எண்ணிக்கை 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை என அறியப்படுகிறது.

    இந்த எண்ணிக்கையின் சூழலில் 536 மீன் குடும்பங்கள், 5,324 பேரினங்களை உள்ளடக்கிய மீன்கள் கூட்டம் மற்றும் 37 ஆயிரத்து 424 சிற்றின மீன் இனங்களாக அங்கீகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்பது உயிரியல் ஆய்வில் ஓர் அதிசயம்.

    உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் உலக மீன்வளம் மற்றும் நீருயிரின் வளர்ப்பின் நிலை 2024-ம் ஆண்டு அறிக்கையின்படி உலகளாவிய பிடிப்பு மீன்வளம் 92.3 மில்லியன் டன்களை எட்டியிருக்கிறது. இதில் கடல் மீன்பிடிப்பு 81 மில்லியன் டன்களாகவும், உள்நாட்டு மீன்பிடிப்பு 11.3 மில்லியன் டன்களாகவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது. உலக மீன்பிடி உற்பத்தியில் சீனா முன்னணியில் இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து இந்தோனேசியா, இந்தியா, பெரு மற்றும் ரஷியா கூட்டமைப்பு போன்ற நாடுகள் மீன்பிடி உற்பத்தியில் இருந்து வருகின்றன.

    தற்போது கடல்நீர் வெப்பமடைதல், அமிலமயமாதல், வாழ்விடச் சீரழிவு, அசாதாரண வானிலை நிகழ்வுகள் போன்ற காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மற்றும் பிளாஸ்டிக் மாசுபாடு, வேதிப்பொருள் போன்ற மாசுபாட்டின் விளைவுகள் உலக மீன்வளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

    ஆகவே உலகளாவிய மீன்வளத்தின் எதிர்காலத்தையும், அவற்றைச் சார்ந்திருக்கும் சமூகங்களையும் உறுதிப்படுத்த, கடலோர கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் நிலையான மேலாண்மை மிக முக்கியமானது. மேலும் நிலையான மீன்பிடி முறைகள், ஆரோக்கியமான நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே உலக மீன்வள நாளின் முக்கிய நோக்கமாகும்.

    Next Story
    ×