என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வைகை அணையில் இருந்து சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு தண்ணீர் திறப்பு
- வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.10 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
நேற்று இரவு முதல் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியிலும், கம்பம், கூடலூர், காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வைகை அணையின் நீர்மட்டம் 64 அடியை நெருங்கி வருவதால் அணையில் இருந்து சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கிருதுமால் உபவடி நிலத்திற்கு தேவைக்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி வைகை அணையில் இருந்து இன்று காலை முதல் மேற்கண்ட 3 மாவட்டங்களுக்கு 650 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. 8 நாட்களுக்கு 450 மி.கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 63.85 அடியாக உள்ளது. வரத்து 1346 கன அடி. திறப்பு 1319 கன அடி. இருப்பு 4378 மி.கன அடி.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.10 அடியாக உள்ளது. வரத்து 1147 கன அடி. திறப்பு 1400 கன அடி. இருப்பு 6899 மி.கன அடி.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 என முழு கொள்ளளவில் தொடர்ந்து நீடிப்பதால் அணைக்கு வரும் 100 கன அடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48.40 அடி. வரத்து 98 கன அடி. இருப்பு 310 மி.கன அடி. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 43.10 அடி. வரத்து 15 கன அடி, திறப்பு 14.47 கன அடி.
கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் இன்று 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேகமலை அருவியிலும் தொடர்ந்து பக்தர்கள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.






