என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக குறைந்தது - பரிசல் இயக்க அனுமதி
- விடுமுறை நாட்களில் வழக்கத்துக்கு மாறாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள்.
- நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தும் குறைந்தது.
ஒகேனக்கல்:
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாகும். இங்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் சுற்றுலாப்பயணிகள் ஏராளமானோர் வருகிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் வழக்கத்துக்கு மாறாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள்.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும்போது சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளிப்பதற்கும் பரிசலில் பயணம் செய்யவும் தடை விதிக்கப்படும். நீர்வரத்து குறைந்தவுடன் மீண்டும் பரிசல் இயக்க மற்றும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படும்.
இந்த நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவியில் குளிக்கவும், பரிசலில் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் கடந்த 11-ந் தேதி தடை விதித்தது.
இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தும் குறைந்தது. தொடர்ந்து நேற்று ஒகேனக்கல்லுக்கு 16 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 14 அடியாக குறைந்தது.
இதன் காரணமாக பரிசல் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட நிர்வாகம் விலக்கி கொண்டுள்ளது. இதனால் நேற்று காவிரி ஆற்றில் பரிசல் இயக்கப்பட்டது. அதே நேரத்தில் சுற்றுலாப்பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.






