என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோவை வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு
    X

    கோவை வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு

    • துணை ஜனாதிபதி வருகையையொட்டி திருப்பூரில் 5அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • 2 நாட்கள் திருப்பூரில் கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்திய நாட்டின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இன்று கோவை வந்தார். கோவை வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவர் கொடிசியாவில் மக்கள் மன்றம்சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    அதன்பிறகு, சொந்த ஊரான திருப்பூர் வருகிறார். இதற்காக அவர் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் மாலை 5 மணிக்கு திருப்பூர் வருகிறார். அங்கு அவருக்கு அனைத்து அரசியல் கட்சியினர், தொழில் முனைவோர்கள், பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு உள்ள குமரன் சிலை, மாநகராட்சி அலுவலகம் முன் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன்பிறகு பிச்சம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று இரவு அங்கு தங்குகிறார்.

    பின்னர் நாளை (புதன்கிழமை) காலை சந்திராபுரத்தில் உள்ள தனது குலதெய்வமான பாலைமரத்து அய்யன் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்கிறார். இதைத்தொடர்ந்து முத்தூர் செல்லாண்டியம்மன் கோவில், சின்னமுத்தூர் செல்வகுமாரசாமி கோவில், அத்தாத்தா முத்தாத்தா செல்லாத்தா கோவில், முத்தூர் அத்தனூர் அம்மன் குப்பண்ணசாமி கோவில்களில் அவர் சாமி தரிசனம் செய்கிறார்.

    பின்னர் அங்கிருந்து திருப்பூர் வரும் அவர், ஷெரீப் காலனியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று தாயாரை சந்தித்து ஆசி பெறுகிறார். காலை 11.30 மணிக்கு திருப்பூர்-தாராபுரம் ரோட்டில் உள்ள வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் அனைத்து தொழில் அமைப்பினர், தன்னார்வலர்கள், அனைத்து கட்சியினர் சார்பில் நடக்கும் பாராட்டு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார்.

    துணை ஜனாதிபதி வருகையையொட்டி திருப்பூரில் 5அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மத்திய பாதுகாப்பு படை குழுவினர், தமிழக குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உள்ளிட்ட குழுவினர் செய்துள்ளனர்.

    திருப்பூர் குமரன் சிலை, காந்தி சிலை மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் வீடு, அவர் செல்ல இருக்கும் கோவில்கள், அவர் தங்கும் உறவினர் வீடு உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    துணை ஜனாதிபதி வருகையையொட்டி திருப்பூரில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 2 நாட்கள் திருப்பூரில் கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் அனைத்தும் நேற்றே போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகப்படும்படியான நபர்களை போலீசார் விசாரணை நடத்தி அனுப்பி வைக்கிறார்கள்.

    மேலும் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள லாட்ஜ்கள், விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் இருந்தால் தகவல் தெரிவிக்கும்படி லாட்ஜ், விடுதி பணியாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×