என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    2 வாரங்களை கடந்து 69 அடிக்கு மேல் நீடிக்கும் வைகை அணை நீர்மட்டம்
    X

    மேகமலை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள காட்சி.

    2 வாரங்களை கடந்து 69 அடிக்கு மேல் நீடிக்கும் வைகை அணை நீர்மட்டம்

    • முல்லைப்பெரியாறு அணையிலும் நீர்மட்டம் தொடர்ந்து 135.30 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    தென்மேற்கு பருவமழை ஓரளவு கைகொடுத்ததாலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது.

    நீர்மட்டம் கடந்த 5-ந்தேதி 69 அடியாக உயர்ந்த நிலையில் 5 மாவட்டங்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் திறக்கப்படலாம் என்ற நிலையில் நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    இருந்தபோதும் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் சரியாக இருந்ததால் நீர்மட்டம் 70 அடியை எட்டவில்லை. இருந்தபோதும் அணையின் நீர்மட்டத்தை 70 அடிக்கு மேல் உயர்த்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    கடந்த 5-ந் தேதி முதல் தற்போது வரை அணையின் நீர்மட்டம் 69 அடிக்கு மேல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 69.42 அடியாக உள்ளது. அணைக்கு 515 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து நேற்று 969 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 557 கன அடி மட்டுமே திறக்கப்படுகிறது.

    மதுரை, சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்கும், பாசனத்துக்கும் 557 கன அடி மட்டும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5681 மி.கன அடியாக உள்ளது.

    இதே போல் முல்லைப்பெரியாறு அணையிலும் நீர்மட்டம் தொடர்ந்து 135.30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1023 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5940 மி.கன அடியாக உள்ளது. தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை அளவு குறைந்த போதிலும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மின் உற்பத்தி 4 ஜெனரேட்டர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள சுருளி, கும்பக்கரை, மேகமலை அருவிகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. நேற்று காலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ஆண்டிபட்டி சுற்று வட்டார பகுதிகளிலும், மேகமலை, போடி உள்ளிட்ட இடங்களிலும் 2 மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் சின்ன சுருளி அருவியில் இன்று காலை நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வமுடன் அருவியில் நீராடி வருகின்றனர்.

    Next Story
    ×