என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
    X

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

    • அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.72 அடியாக உள்ளது.

    சேலம்:

    கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு அதிகளவில் வரத்தொடங்கியதால் கடந்த 29-ந்தேதி அணை தனது முழு கொள்ளளவை எட்டியது.

    இதையடுத்து உபரிநீர் அப்படியே 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி கரையோரம் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் படிப்படியாக மழை நின்றதால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைய தொடங்கியது. அதே நேரம் பாசனம் மற்றும் 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.

    இதற்கிடையே தற்போது கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 119.72 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று மாலை வினாடிக்கு 31 ஆயிரத்து 624 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 35 ஆயிரத்து 860 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் 16 கண் மதகு பாலம் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீரை பொதுமக்கள் குடும்பத்துடன் கண்டு ரசித்தனர்.

    Next Story
    ×