என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மணிமுத்தாறு 80 அடி பாசன கால்வாயில் 2-வது முறையாக உடைப்பு - விவசாய பணிகள் கடும் பாதிப்பு
    X

    மணிமுத்தாறு 80 அடி பாசன கால்வாயில் 2-வது முறையாக உடைப்பு - விவசாய பணிகள் கடும் பாதிப்பு

    • கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
    • கால்வாய் மூலம் நீர் பெறும் குளங்களுக்கும் தண்ணீர் செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணையில் இருந்து 80 அடி பாசன கால்வாய் மூலம் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதை தொடர்ந்து, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்தது. இந்நிலையில் கடந்த மாதம் பிசான சாகுபடிக்காக 80 அடி பாசன கால்வாயில் 440 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து விவசாயிகள் முழு வீச்சில் பிசான பருவ நெல் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இன்று மணிமுத்தாறு 80 அடி பாசன கால்வாயில் வீரவநல்லூர் அருகே ரெட்டியாபுரத்தை அடுத்த கொப்பரை சேட்டு என்ற பகுதியில் மிகப்பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் நிறுத்தம் காரண மாக நடந்து வந்த விவசாயப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கால்வாய் மூலம் நீர் பெறும் குளங்களுக்கும் தண்ணீர் செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் உடைப்பு ஏற்பட்ட இடத்தை சீர மைக்கும் பணியை அதிகாரி கள் உத்தரவின்பேரில் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதே பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட உடைப்பு தற்காலிகமாக சரி செய்யப்பட்ட நிலையில், தற்போது 2-வது முறையாக மீண்டும் கடும் அரிப்புடன் பெரிய உடைப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கால்வாய் கரைகள் பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாததே இதுபோன்ற தொடர் உடைப்புகளுக்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ள விவசாயிகள், கடந்த 20 ஆண்டுகளாக கரை சுவர்கள் உரிய பராமரிப்பு இன்றி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    உடைப்பை துரிதமாக சரி செய்து, விரைவில் மீண்டும் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், நிரந்தர தீர்வாக உரிய நிதி ஒதுக்கீடு செய்து கால்வாய் கரைகளை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    Next Story
    ×