என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஒவ்வொரு ஆண்டும் அதிக என்ஜினீயர்களை உருவாக்கும் இந்தியா, சீனா- தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 17 சதவீதம் பேர்
    X

    ஒவ்வொரு ஆண்டும் அதிக என்ஜினீயர்களை உருவாக்கும் இந்தியா, சீனா- தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 17 சதவீதம் பேர்

    • காலத்துக்கேற்ப என்ஜினீயரிங் துறை மாறிக்கொண்டே போகிறது.
    • இந்தியாவில் அதிக என்ஜினீயர்களை உருவாக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் இந்தியா, சீனா நாடுகள் அதிக என்ஜினீயர்களை உருவாக்குகின்றன. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 17 சதவீதம் பேர் உருவாக்கிறார்கள்.

    கற்பனையில் இருக்கும் ஒரு விஷயத்தை தொழில்நுட்பத்தின் துணையோடு நிஜமாக்குபவர்கள்தான் என்ஜினீயர்கள். ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பின் பங்கு அதிகம். அந்த துறைகளுக்கு எல்லாம் செயலாக்கம், வடிவம் கொடுப்பது என்ஜினீயர்கள்தான்.

    காலத்துக்கேற்ப என்ஜினீயரிங் துறை மாறிக்கொண்டே போகிறது. இன்றைய நவீன உலகம் தொழில்நுட்பத்தின் அச்சாணியில் சுழன்று கொண்டிருக்கிறது. அந்த தொழில்நுட்ப அச்சாணியை உருவாக்கும் வல்லமை படைத்த என்ஜினீயர்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், தொழில் புரட்சியையும் தீர்மானிக்கும் சக்தியாக திகழுகிறார்கள்.

    அப்படி இருக்கக்கூடிய இந்த என்ஜினீயர்கள் உலகில் எந்த நாட்டில் இருந்து அதிகம் உருவாக்கப்படுகிறார்கள்? என்ற புள்ளிவிவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.

    அதில் உலகில், சீனா, இந்தியாவில் இருந்துதான் ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையில் என்ஜினீயர்கள் படித்து முடித்து வெளியேறுகிறார்கள். இவர்களில் பலர் மேல்படிப்புக்கும், பலர் நல்ல சம்பளத்தில் பணியிலும் சேருகின்றனர்.

    அந்த வகையில் சீனா மற்றும் இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு தலா 15 லட்சம் என்ஜினீயர்கள் உருவாக்கப்படுகின்றனர். அதற்கடுத்தபடியாக ரஷியாவில் 4 லட்சத்து 54 ஆயிரத்து 436 என்ஜினீயர்களும், அமெரிக்காவில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 826 என்ஜினீயர்களும், ஈரானில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 695 என்ஜினீயர்களும் உருவாகின்றனர்.

    அதாவது, முதல் 2 இடங்களில் இருக்கக்கூடிய சீனா, இந்தியா நாடுகள், அதற்கடுத்த பட்டியலில் இருக்கும் முதல் 12 நாடுகளுடன் ஒப்பிடுகையில், குறைந்தது 3 மடங்கு முதல் 15 மடங்கு வரை அதிகமான என்ஜினீயர்களை உருவாக்குகின்றன.

    சீனாவின் உற்பத்தித்துறை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அதிக எண்ணிக்கையிலான என்ஜினீயர்களே காரணம் என சொல்லப்படுகிறது. இந்தியா அதிக எண்ணிக்கையில் என்ஜினீயர்களை உருவாக்கினாலும், அவர்களில் பெரும்பாலானோருக்கு தொழில்துறைக்கு தேவையான நேரடித்திறன் குறைவாக இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இதனை கையாளும் வகையில் மத்திய-மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    இந்தியாவில் அதிக என்ஜினீயர்களை உருவாக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் படித்து முடித்து என்ஜினீயர்களாக உருவாகுபவர்களில் 17 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு என்ஜினீயர்களுக்கு தொழில்துறைக்கு தேவையான நேரடித்திறன் கிடைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    Next Story
    ×