என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
    X

    கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

    • கொப்பரை தேங்காய்கள் தேவைப்படும்போது கொள்முதல் செய்யப்பட்டு மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொள்முதல் நிலையம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி காந்தி வீதியில் மேரிகோ லிமிடெட் என்ற தனியார் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இதன் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. மேலும் இதன் கிளைகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

    கொப்பரை தேங்காய்கள் தேவைப்படும்போது கொள்முதல் செய்யப்பட்டு மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது.

    அப்போது மதியம் 2 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் திடீரென வந்து இறங்கினர். அவர்கள் கொள்முதல் நிலையத்துக்குள் சென்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இரவு வரை இந்த சோதனை நீடித்தது. இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக தேங்காய் கொள்முதல் நிலையத்திற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையிட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு அடிப்படையில் இந்த சோதனையை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொள்முதல் நிலையம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    Next Story
    ×