என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வட தமிழகத்தில் 5-ந்தேதி முதல் மீண்டும் மழை: வானிலை மையம் தகவல்
- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
- இன்று சென்னையில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
தமிழகத்தில் பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. அக்டோபர் மாதம் இறுதியில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் வட தமிழகத்திலும் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி ஆந்திராவில் கரையை கடந்தது. அதனை தொடர்ந்து கடந்த 5 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பகலில் வெயில் கோடை காலம் போல கொளுத்தியது.
இந்த நிலையில் வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பருவமழையின் தொடர்ச்சியாக வருகிற 5-ந்தேதி முதல் வட தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இன்று சென்னையில் லேசான மழை பெய்யக்கூடும் என்றார்.






