நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை

அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை
Published on

ஒகேனக்கல்:

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனிடையே கர்நாடக-தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல், கேரட்டி உள்ளிட்ட வனப்பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.

இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று 20 ஆயிரமாக வந்த நீர்வரத்து இன்று காலை 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.

நீர்வரத்து அதிகரிப்பால் மெயின் அருவி, ஐவர்பாணி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் மெயின் அருவிக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அவர்கள் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com