என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல்லில் இன்று முதல் பரிசல் இயக்க அனுமதி: அருவியில் குளிக்க 4-வது நாளாக தடை
- மெயின் அருவி, ஐவர்பாணி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- மெயின் அருவிக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒகேனக்கல்:
வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனிடையே கர்நாடக-தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல், கேரட்டி உள்ளிட்ட வனப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 24 ஆயிரம் கனஅடிவந்தது.
இதையடுத்து காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணிக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.
மெயின் அருவி, ஐவர்பாணி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருவதால் 3 நாட்களுக்கு பிறகு இன்று முதல் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் அருவியில் குளிக்க 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மெயின் அருவிக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.






