என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.
தருமபுரி:
கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணை உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் கே.ஆர்.எஸ். அணையும், கபினி அணையும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி விட்டன.
இதில் கபினி அணை 2 முறை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த தொடர் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது. தற்போது மழை ஓய்ந்துள்ளதால் நீர்வரத்து குறைந்து, தண்ணீர் திறப்பும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரத்து 704 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு 14 ஆயிரத்து 171 கனஅடி திறக்கப்பட்டுள்ளது.
கபினி அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரத்து 524 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 171 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இரு அணைகளில் இருந்தும் நேற்று தமிழக காவிரியில் வினாடிக்கு 23 ஆயிரத்து 342 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த தண்ணீர் தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நேற்று வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக வந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 18 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.






