என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு: அருவியில் குளிக்க, பரிசல் இயக்க 12-வது நாளாக தொடரும் தடை
- காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
- பொதுவாகவே வார இறுதி நாட்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப்பயணிகள் அதிகஅளவில் வருகை தருவர்.
தருமபுரி:
கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
இதனால் கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரத்து 051 கன அடி நீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 37 ஆயிரத்து 590 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதேபோல் மைசூரு மாவட்டம், எச்.டி. கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்து கபினி அணைக்கு நீர்வரத்து நேற்று ஆயிரத்து 13 ஆயிரத்து 044 கனஅடியாக வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 375 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 46 ஆயிரத்து 965 கன அடி திறந்து விடப்பட்டு இருந்தது.
இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்றுகாலையும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நடைபாதைக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
ஒகேனக்கல்லில் பழைய தீயணைப்பு நிலையம் அருகில் பரபரப்பாகக் காணப்படும் கடைகள் சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் மூடப்பட்டுள்ளன.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 12-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கார் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் பென்னாகரம் அடுத்த மடம் சோதனை சாவடி பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர். இவ்வழியாக உள்ளூர் வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
பொதுவாகவே வார இறுதி நாட்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப்பயணிகள் அதிகஅளவில் வருகை தருவர்.
தற்போது தடை அமலில் உள்ளதாலும், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுவதாலும் நேற்றும், இன்றும் சுற்றுலா பயணிகளின்றி ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்பட்டது.
ஒகேனக்கல்லில் செயல்படும் உணவகங்கள், துண்டு உள்ளிட்ட ஆடைகள் விற்பனை செய்யும் கடைகள், தேநீர் கடைகள் உட்பட 4-ல் ஒரு பங்கு கடைகள் மட்டுமே செயல்படுகின்றன.
இதனால், சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள தொழிலாளர்கள் பரிசல் ஓட்டுநர்கள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் வருவாய் இழந்து தவிக்கின்றனர்.
இந்த தொழிலில் ஈடுபடுவோர், தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் நாட்களில் தங்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.