என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- காவிரி கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஒகேனக்கல்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக 2 அணைகளின் பாதுகாப்பு கருதி அதிகளவில் தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்று முன்தினம் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று காலை வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து பின்னர் மாலையில் வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. தொடர்ந்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
ஆனாலும், ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் சுமார் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
காவிரி கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல், சத்திரம், ராணிப்பேட்டை, ஊட்டமலை, நாடார் கொட்டாய் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் போலீசார் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






