என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வைகை அணையில் இருந்து இன்று காலை முதல் கூடுதல் தண்ணீர் சிறிய மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் காட்சி.
வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
- அணையின் நீர்மட்டம் 64 அடியை கடந்த நிலையில் விருதுநகர் கிருதுமால் நதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
- 6 மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெற்று வருகின்றன.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக மாவட்டத்தில் கனமழை பெய்ததாலும் அணையின் நீர்பிடிப்பு பகுதிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததாலும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
அணையின் நீர்மட்டம் 64 அடியை கடந்த நிலையில் விருதுநகர் கிருதுமால் நதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் இன்று காலை முதல் 5 மாவட்ட பாசனத்திற்கு 1900 கனஅடி, கிருதுமால் நதி பாசனத்திற்கு 442 கன அடி, மதுரை, திருமங்கலம், சேடப்பட்டி குடிநீர் தேவைகளுக்காக 69 கனஅடி என மொத்தம் 2319 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கால்வாய் மூலம் 1900 கன அடி மற்றும் 7 சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 63.94 அடியாக உள்ளது. நீர்வரத்து 1411 கன அடி. இருப்பு 4398 மி.கன அடி.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.50 அடி. வரத்து 596 கனஅடி. திறப்பு 1600 கன அடி. இருப்பு 6244 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.90 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி என அதன் முழு கொள்ளளவில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 15 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 43.30 அடி. வரத்து 12 கன அடி. திறப்பு 15 கனஅடி.






