search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பரமக்குடியில் என்ஜின் மீது ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி உடல் கருகினார்
    X

    பரமக்குடியில் என்ஜின் மீது ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி உடல் கருகினார்

    • பரமக்குடி ரெயில் நிலையத்தில் ரெயில் வந்து நின்றதும் முகேஷ்குமார் மற்றும் அவருடன் வந்த நண்பர்கள் உற்சாக மிகுதியில் ரெயில் என்ஜின் மீது ஏறினர்.
    • ரெயில் என்ஜின் மீது ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதை ரெயில் நிலையத்தில் திரண்டு நின்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பரமக்குடி:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது 17). இவர் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த நண்பர்களுடன் வந்தார்.

    அவர்கள் அனைவரும் திருச்சியில் இருந்து ராமேசுவரம் செல்லும் ரெயிலில் இன்று பரமக்குடி வந்தனர். பரமக்குடி ரெயில் நிலையத்தில் ரெயில் வந்து நின்றதும் முகேஷ்குமார் மற்றும் அவருடன் வந்த நண்பர்கள் உற்சாக மிகுதியில் ரெயில் என்ஜின் மீது ஏறினர்.

    அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மற்றும் பொதுமக்கள் என்ஜினை விட்டு கீழே இறங்குமாறு எச்சரித்தனர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக ரெயில் என்ஜின் மீது ஏறியபடி இருந்தனர்.

    அப்போது முகேஷ்குமார் கையில் வைத்திருந்த கொடியை மேல்நோக்கி தூக்கியபோது, கொடி கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பி மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் பட்டது. இதனால் வாலிபர் முகேஷ்குமார் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். மின்சாரம் தாக்கியதில் அவரது உடல் கருகியது.

    ரெயில் என்ஜின் மீது ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதை ரெயில் நிலையத்தில் திரண்டு நின்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் முகேஷ்குமாரை மீட்டு பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் உடல் முழுவதும் கருகியதால் முகேஷ்குமார் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×