search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காதலிக்க மறுத்த பெண்ணை கடத்தி ஓடும் காரில் தாலி கட்டிய வாலிபர்

    • விக்கிரவாண்டி அருகே கம்மியாம்குடியூரில் கார் சென்றபோது திடீரென விக்னேஸ்வரன் அந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார்.
    • கடத்தலில் ஈடுபட்ட விக்னேஸ்வரன், செல்வகுமார், சுபாஷ்சந்திரபோஸ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தரங்கம்பாடி:

    தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கஞ்சமேட்டு தெருவை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 32). இவர் படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மயிலாடுதுறை செட்டிகுளம் தெரு மயிலம்மன் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார்.

    அப்போது அதே தெருவை சேர்ந்த 21 வயதான பட்டதாரி இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பழகி வந்தனர். அப்போது விக்னேஸ்வரனின் நடவடிக்கையில் அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரது செயல் பிடிக்காமல் பழகுவதை தவிர்த்து வந்தார்.

    இருந்தாலும் அந்த பெண்ணை விக்னேஸ்வரன் தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த பெண் என்னை பார்ப்பதை நிறுத்தி கொள்ளுமாறு கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஸ்வரன் அந்த பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டார்.

    இது குறித்து பெண்ணின் பெற்றோர் ஏற்கனவே மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் போலீசார் விக்னேஸ்வரனிடம் இனி அந்த பெண்ணை தொந்தரவு செய்ய மாட்டேன் என எழுதி வாங்கினர்.

    அப்படியும் திருந்தாத விக்னேஸ்வரன் கடந்த 12-ந் தேதி அப்பெண்ணை கடத்த முயன்றார். ஆனால் அவரிடம் இருந்து தப்பித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை தேடி வந்தனர்.

    இதனை அறிந்த விக்னேஸ்வரன் சில நாட்கள் தலைமறைவாக இருந்தார். அப்போது எப்படியாவது அவரை கடத்த வேண்டும் என்று திட்டம் தீட்டினார். இதற்கு உடந்தையாக நண்பர்களான செல்வகுமார், சுபாஷ்சந்திரபோஸ் உள்ளிட்ட 14 பேரை சேர்த்து கொண்டார்.

    இதையடுத்து நேற்று இரவு விக்னேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் 14 பேர் என மொத்தம் 15 பேர் ஒரு கார், மோட்டார் சைக்கிளில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மயிலாடுதுறைக்கு வந்தனர். அந்த பெண்ணின் வீட்டு வாசலில் கார், மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வேகமாக வீட்டுக்குள் புகுந்தனர்.

    அப்போது அங்கு அந்த பெண் மற்றும் அவரது தாய் இருந்தனர். திடீரென அவரது தாயை தள்ளிவிட்டு அந்த பெண்ணை சரசரவென விக்னேஸ்வரன் மற்றும் அவருடன் வந்தவர்கள் இழுத்து சென்று காரில் வலுகட்டாயமாக கடத்தினர். அந்த பெண் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என கத்தி கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் உடனே பெண்ணின் வாயை பொத்தி வேகமாக அங்கிருந்து தப்பினர். இந்த சம்பவம் சில நிமிடங்களில் நடந்து முடிந்தது. இது பற்றிய வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது.

    இதுகுறித்து அப்பெண்ணின் தாய் உடனடியாக மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் உடனே ஜீப்பில் அவர்களை பின்தொடர்ந்தனர். மேலும் மற்ற போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தனர். இந்நிலையில் விக்னேஸ்வரனுடன் வந்த 12 பேர் செல்லும் வழியில் தப்பி விட்டனர்.

    விக்னேஸ்வரன், செல்வகுமார், சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் அந்த பெண் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கம்மியாம்குடியூரில் கார் சென்றபோது திடீரென விக்னேஸ்வரன் அந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அப்பெண் என் வாழ்க்கையை பாழாக்கி விட்டியே என கதறினார்.

    அந்த நேரத்தில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் விக்னேஸ்வரன் காரை வேகமாக ஓட்டினார். போலீசார் பின்தொடர்ந்து சென்று காரை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் காரில் இருந்த விக்னேஸ்வரன், சுகாஷ்சந்திரபோஸ், செல்வகுமார் மற்றும் அந்த பெண் ஆகிய 4 பேரையும் மீட்டு விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    இதையடுத்து மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து 4 பேரையும் மீட்டு மயிலாடுதுறை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு போலீசார் பெண் கடத்தல் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரன், செல்வகுமார், சுபாஷ்சந்திரபோஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய மேலும் 12 பேரை தேடி வருகின்றனர்.

    மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×