search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி செய்தது யார்?- ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை

    • சமூக விரோதிகள் ரெயிலை கவிழ்க்க இரும்பு துண்டுகளை வைத்து சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.
    • கள்ளிக்குடி ரெயில் நிலையத்தில் பெட்டியின் ரெயில் படிக்கட்டுகளை சரி செய்து பின்னர் ரெயில் புறப்பட்டு சென்றது.

    திருமங்கலம்:

    சென்னையில் இருந்து நாள்தோறும் கேரள மாநிலம் குருவாயூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மாலை மதுரை வந்தடைந்த ரெயில் விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    திருமங்கலம் அருகே கள்ளிக்குடி பகுதியை கடந்து சென்றபோது திடீரென பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். சத்தம் வந்த ரெயில் பெட்டி பகுதியில் சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் மர்மநபர்கள் பெரிய அளவிலான இரும்பு துண்டை வைத்து சென்றிருப்பது தெரியவந்தது.

    ரெயில் வந்த வேகத்தில் இரும்பு துண்டு மீது மோதியதில் பயங்கர சத்தம் ஏற்பட்டுள்ளது. இதில் ரெயில் பெட்டியில் ஏறும் படிக்கட்டுகள் வளைந்து சேதம் அடைந்திருந்தன. அத்துடன் தண்டவாள பகுதியில் உள்ள 4 ஸ்லீப்பர் கட்டைகளும் உடைந்தது.

    ரெயில் பெட்டியில் படிக்கட்டை வளைக்கும் அளவிலும், ஸ்லீப்பர் கட்டிகளை தகர்க்கும் வகையிலும் சக்தி வாய்ந்த இரும்பு துண்டை மர்ம நபர்கள் தண்டவாளத்தில் வைத்துச் சென்று உள்ளனர். எனவே இது ரெயில் கவிழ்ப்புக்கு சதியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இதுதொடர்பாக ரெயில் என்ஜின் டிரைவர் விருதுநகர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிதறி கிடந்த இரும்பு துண்டுகளை சேகரித்தனர்.

    தொடர்ந்து அந்த ரெயில் தண்டவாளப் பகுதியில் வேறு ஏதேனும் இரும்பு துண்டுகள் வைக்கப்பட்டுள்ளதா? என போலீசார் தீவிர சோதனை நடத்தினர். ஒரு மணி நேரம் ஆய்வுக்கு பின் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    கள்ளிக்குடி ரெயில் நிலையத்தில் பெட்டியின் ரெயில் படிக்கட்டுகளை சரி செய்து பின்னர் ரெயில் புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக 90 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.

    தண்டவாளத்தில் பெரிய இரும்பு துண்டுகளை வைத்து விபத்தை ஏற்படுத்தி உள்ளது ரெயில்வே போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூக விரோதிகள் ரெயிலை கவிழ்க்க இரும்பு துண்டுகளை வைத்து சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.

    விபத்து நடந்த பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மதுவாங்கும் நபர்கள் ரெயில் தண்டவாள பகுதியில் அமர்ந்து மது குடிப்பது வழக்கம். எனவே போதையில் யாரேனும் இந்த செயலை செய்தார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×