search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
    X

    களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரித்திருப்பதை காணலாம்.

    களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

    • தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் வனத்துறையினர் தடை விதித்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, கன்னடியான் பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை பகுதியில் 26 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 739 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அந்த அணைகளில் இருந்து பாசனத்திற்காக 1,204 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணைக்கு 204 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அந்த அணையின் நீர்மட்டம் 79.90 அடியாக உள்ளது.

    களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று இரவில் மிதமான மழை கொட்டியது. இதனால் தலையணையில் இன்று காலை முதல் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தபடி தண்ணீர் பாய்ந்தோடுகிறது.

    இதையடுத்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் வனத்துறையினர் தடை விதித்தனர். இந்த தகவலை வனசரகர் பிரபாகரன் அறிவித்துள்ளார்.

    அதே நேரத்தில் வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு அணைகளுக்கு நீர்வரத்து இல்லாததால் அவற்றில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் அந்த அணையை நம்பி உள்ள விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் அதிகாலை முதலே மழை பெய்தது. இதனால் மாநகர பகுதியில் தாழ்வான இடங்களிலும், சாலைகளிலும் தண்ணீர் தேங்கியது. இதைத்தொடர்ந்து மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக கடம்பூரில் 33 மில்லிமீட்டரும், கயத்தாறு 26 மில்லிமீட்டரும், குலசேகரன்பட்டினத்தில் 25 மில்லிமீட்டரும், காயல்பட்டினத்தில் 24 மில்லிமீட்டரும் மழை பதிவானது.

    இதேபோல் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், வேடநத்தம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. இன்றும் மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்தது.

    Next Story
    ×