search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாரல் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு- சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
    X

    சாரல் மழையால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்த நிலையில், ஐந்தருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

    சாரல் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு- சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

    • இந்த ஆண்டு தாமதமாக பெய்த தென்மேற்கு பருவமழையால் குற்றால சீசனும் தாமதமாகவே தொடங்கி உள்ளது.
    • நேற்று இரவு முதல் இன்று காலை வரை காற்றுடன் கூடிய சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டும். இந்த ஆண்டு தாமதமாக பெய்த தென்மேற்கு பருவமழையால் குற்றால சீசனும் தாமதமாகவே தொடங்கி உள்ளது.

    குற்றாலத்தின் முக்கிய அருவிகளான மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    தொடர்ந்து மழை குறைவால் தண்ணீர் படிப்படியாக குறைந்த நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் ஓரளவு தண்ணீர் அருவிகளில் விழுந்து வருகிறது. இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு முழுமையான சீசன் இல்லையே என்று சுற்றுலா பயணிகள் ஏக்கம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று காலை முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை விட்டு விட்டு பெய்ததால் அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து சற்று அதிகரிக்க தொடங்கியது.

    நேற்று இரவு முதல் இன்று காலை வரை காற்றுடன் கூடிய சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ஐந்தருவி, மெயின் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் அங்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் குற்றால சீசன் காலங்களில் பழங்கள் விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு ரம்புட்டான், மங்குஸ்தான், ஸ்டார்ஸ் ப்ரூட்ஸ் பேரிக்காய், மலைசீதா, கிர்ணி, அன்னாசி பழம், பலாப்பழம் உள்ளிட்ட மலைவாச தலங்களில் கிடைக்கும் அரிய வகை பழங்கள் அதிக அளவில் வியாபாரிகளால் விற்பனை செய்யப்படுகிறது. அதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி ருசித்து மகிழ்கின்றனர்.

    தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு திடீரென சாரல் மழை பெய்தது. நள்ளிரவில் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகள், முக்கூடல் உள்ளிட்ட இடங்களிலும் சுமார் அரைமணி நேரம் சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 5 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை குண்டாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 9.2 மில்லிமீட்டரும், கருப்பாநதி, அடவிநயினார் அணையில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    Next Story
    ×