search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி: பத்திரப்பதிவு இணைப்பதிவாளர் வீட்டில் ரூ.12¼ லட்சம் சிக்கியது
    X

    லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி: பத்திரப்பதிவு இணைப்பதிவாளர் வீட்டில் ரூ.12¼ லட்சம் சிக்கியது

    • சத்திரரெட்டியப்பட்டி போலீஸ் சோதனை சாவடி அருகே லஞ்ச ஒழிப்புத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
    • காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1.25 லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது.

    விருதுநகர்:

    மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசுவரன் (வயது59). விருதுநகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இணைப்பதிவாளராக உள்ளார். இவர் நேற்று பணி முடிந்து அங்கு கேமரா ஆபரேட்டராக வேலை பார்க்கும் தனது உதவியாளர் முத்துகாசியுடன் மதுரைக்கு காரில் புறப்பட்டார்.

    சத்திரரெட்டியப்பட்டி போலீஸ் சோதனை சாவடி அருகே லஞ்ச ஒழிப்புத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சுந்தரேசுவரனின் காரை நிறுத்தி அவர்கள் சோதனையிட்டனர். அப்போது காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1.25 லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது.

    அதுகுறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, பத்திரப்பதிவு அலுவலகத்தில் 2 நாட்கள் வசூலித்த பணம் என கூறி உள்ளார். ஆனால் சந்தேகமடைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது அலுவலகத்தில் சோதனையிட முடிவு செய்தனர். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சால்வன்துரை, பூமிநாதன் ஆகியோரின் தலைமையில் விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரவு 8 மணியளவில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    அங்கு பணம் எதுவும் சிக்கவில்லை. இதனை தொடர்ந்து சுந்தேரசுவரனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் பணம் வைத்திருப்பதாக அவர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து மதுரையில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.11 லட்சம் பணம் சிக்கியது.

    இதுகுறித்து விசாரித்தபோது பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் தலா ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்று வந்ததும், தினமும் ரூ.1,200 வாடகை கொடுத்து காரில் மதுரையில் இருந்து விருதுநகருக்கு வந்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து சுந்தரேசுவரன், முத்துகாசி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் ஆலோசனைபடி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

    கடந்த வாரம் ராமநாதபுரம் சார்பதிவாளர் பெத்துலட்சுமி பஸ் நிலையத்தில் லஞ்ச பணம் வாங்கும்போது கையும், களவுமாக சிக்கினார். அவர் வேலை பார்க்கும் அலுவலகங்களில் சோதனை செய்தபோது ரூ.12 லட்சம் ரொக்கம், ரூ.1 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் விருதுநகர் இணைப்பதிவாளர் கார், வீட்டில் இருந்து ரூ.12¼ லட்சம் சிக்கி உள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு பத்திரப்பதிவு அலுவலங்களில் இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொள்ளும்போது கட்டு கட்டாக பணம், ஆவணங்கள் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.

    லஞ்சம் பெறும் அதிகாரிகளும் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர். ஆனாலும் லஞ்சம் பெறுவதும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிகளவில் முறைகேடாக பணம் புழங்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    பத்திரப்பதிவு அலுவலங்களில் முறைகேடாக பண பரிமாற்றம் நடப்பதை முழுமையாக தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×