search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    44 இடங்களில் நடைபெற்ற சோதனையில் சிக்கியது என்ன?- லஞ்ச ஒழிப்பு துறை தகவல்
    X

    கோவையில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டை காணலாம் - அடையாரில் விஜயபாஸ்கர் தங்கி உள்ள அடுக்குமாடி குடியிருப்பை காணலாம்.

    44 இடங்களில் நடைபெற்ற சோதனையில் சிக்கியது என்ன?- லஞ்ச ஒழிப்பு துறை தகவல்

    • எஸ்.பி.வேலுமணி மீது தெருவிளக்குகளை எல்.இ.டி.யாக மாற்றும் திட்டத்தில், மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • சி. விஜயபாஸ்கர் மீது மருத்துவ கல்லூரி அனுமதி முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோவை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    எஸ்.பி.வேலுமணி மீது தெருவிளக்குகளை எல்.இ.டி.யாக மாற்றும் திட்டத்தில், மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்ததாகவும், சி. விஜயபாஸ்கர் மீது மருத்துவ கல்லூரி அனுமதி முறைகேடு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நேற்று ஒரே நேரத்தில் 2 அமைச்சர்களின் வீடுகள், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 44 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையானது அனைத்து இடங்களிலும் மாலை வரை நீடித்தது. இந்த சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு தொடர்பாக நடந்த சோதனையில் ரூ.32.98 லட்சம் ரொக்கப் பணம், 1 கிலோ 228 கிராம் தங்க நகைகள், 948 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 10 கார்களும் கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 316 ஆவணங்கள் 2 வங்கி லாக்கர் சாவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதேபால் சி.விஜயபாஸ்கர் மீதான வழக்கு தொடர்பாக நடந்த சோதனையில் ரூ.18.37 லட்சம் ரொக்கப் பணம், 1 கிலோ 872 கிராம் தங்க நகைகள், 8 கிலோ 28 கிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.

    வழக்கு தொடர்பாக 120 ஆவணங்கள், 4 வங்கி லாக்கர் சாவிகள், 1 பென் டிரைவ், 1 வன் தட்டு உள்ளிட்டவை விசாரணைக்காக கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளனர்.

    Next Story
    ×