search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி உசிலம்பட்டியில் இன்று கடையடைப்பு
    X

    58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி உசிலம்பட்டியில் இன்று கடையடைப்பு

    • கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி உசிலம்பட்டியில் 58 கிராம பாசன விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
    • இன்று காலை முதல் உசிலம்பட்டி நகர் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான ஜீவாதாரமாக 58 கிராம கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும்போது மதுரை தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 33 கண்மாய்களும் 110 கிராமங்களில் உள்ள 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    இந்தப் பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பினால் தான் விவசாயம் மட்டுமின்றி நிலத்தடி நீரும் உயர்வதுடன் குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வு ஏற்படும். எனவே, இந்த கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி உசிலம்பட்டியில் 58 கிராம பாசன விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு கட்டமாக இன்று உசிலம்பட்டியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. 58 கிராம கால்வாய் பாசனத்திட்ட விவசாய சங்கத்தினர், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் உசிலம்பட்டி விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வர்த்தக சங்கம், நகைக்கடை வியாபாரி சங்கம், ஆட்டோ சங்கம், வியாபாரி சங்கம், பூக்கடை சங்கம், தினசரி மார்க்கெட் சங்கம், 54 தினசரி நவதானியம் பலசரக்கு சிறு வணிக வியாபாரிகள் சங்கம், வழக்கறிஞர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    இந்தநிலையில் இன்று காலை முதல் உசிலம்பட்டி நகர் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் உசிலம்பட்டி நகர் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. கடையடைப்பு போராட்டத்தை முன்னிட்டு உசிலம்பட்டியில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மதுரை ரோடு, பேரையூர் ரோடு, வத்தலகுண்டு சாலை, தேனி சாலையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. உசிலம்பட்டி தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் பூ கமிஷன் கடை வியாபாரிகள் மற்றும் பூ வியாபாரிகளும் அனைத்து கடைகளையும் அடைத்திருந்தனர்.

    காலையில் திறந்திருந்த ஒருசில கடைகளும் பின்னர் அடைக்கப்பட்டன. பஜார் பகுதியில் விவசாயிகள் சங்கத்தினர் திரண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×