search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உலகப்புகழ் பெற்ற உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு பனை விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
    X

    உடன்குடியில் இனிப்பு வழங்கி கொண்டாடிய பனை விவசாயிகள்.

    உலகப்புகழ் பெற்ற உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு பனை விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

    • உடன்குடி பகுதியில் உள்ள காரத்தன்மை உள்ள மணலினால் இங்குள்ள பனைகளில் கிடைக்கும் பதனீர் தனிச்சுவையாக இருக்கும்.
    • உடன்குடி கருப்பட்டிக்கு அதிகாரப்பூர்வமாக தற்போது புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

    உடன்குடி:

    ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மதுரை மல்லி, ஆத்தூர் வெற்றிலை, வீரவநல்லூர் செடிபுட்டா சேலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் சார்பில் உடன்குடி புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் உள்ள காரத்தன்மை உள்ள மணலினால் இங்குள்ள பனைகளில் கிடைக்கும் பதனீர் தனிச்சுவையாக இருக்கும். மேலும் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் பனங்கருப்பட்டி, கற்கண்டு ஆகியவற்றிக்கு தனிச்சுவையும், மருத்துவ குணமும் உண்டு. எனவே உலகம் முழுவதும் உடன்குடி பனங்கருப்பட்டிக்கு நல்ல கிராக்கி இருந்து வருகிறது.

    தனிச்சிறப்பு கொண்ட இந்த கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள விவசாயிகள், பனைத் தொழிலாளிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். சமீபத்தில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியும், உடன்குடி பனங்கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    இந்நிலையில் உடன்குடி கருப்பட்டிக்கு அதிகாரப்பூர்வமாக தற்போது புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உடன்குடி பகுதியில் உள்ள விவசாயிகள், பனைத்தொழிலாளர்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த அமைப்பினர், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    தங்களது மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் உடன்குடி வட்டார பனங்கருப்பட்டி, கற்கண்டு தயாரிப்பாளர்கள் நல அமைப்பு சார்பில் அதன் தலைவர் சந்ரசேகரன் தலைமையில் செயலாளர் ஷேக்முகமது முன்னிலையில் உடன்குடி மெயின் பஜாரில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.

    இதில் பொன்ஸ்ரீராம், தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்க நிறுவனர் முகைதீன், வாடாப்பூ, சமூக ஆர்வலர் அசோக் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×