search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இன்ஸ்டாகிராமில் பழகிய நண்பரை பார்க்க வீட்டைவிட்டு வெளியேறிய 2 சிறுமிகள்
    X

    இன்ஸ்டாகிராமில் பழகிய நண்பரை பார்க்க வீட்டைவிட்டு வெளியேறிய 2 சிறுமிகள்

    • சிறுமிகள் மாயமானது குறித்து காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
    • சிறுமிகள் போன் செய்த தகவலை அவர்களது பெற்றோர் போலீசிடம் தெரிவித்தனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் இருவரின் 13 வயது மகள்கள் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். அவர்கள் கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளனர்.

    நேற்றும் சிறுமிகள் இருவரும் அவரவர் வீட்டில் தனியாக இருந்தனர். இந்நிலையில் பிற்பகலில் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சிறுமிகள் இருவரையும் காணவில்லை. அவர்களை இருவரது குடும்பத்தினரும் பல இடங்களில் தேடினர். ஆனால் அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    சிறுமிகள் மாயமானது குறித்து காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து மாயமான சிறுமிகளை கண்டுபிடிக்க காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பூர்ணசந்திரபாரதி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் மாயமான சிறுமிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாயமான சிறுமிகளின் பெற்றோரின் செல்போன்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது இன்ஸ்ட்ராகிராம் வலைதளம் மூலம் தூத்துக்குடியை சேர்ந்த சிறுவன் ஒருவனுடன், சிறுமிகள் இருவரும் பழகி வந்தது தெரியவந்தது. இதனால் சிறுமிகள் இருவரும் தூத்துக்குடிக்கு சென்றிருக்கலாம் என போலீசார் கருதினர்.

    இந்த நிலையில் தேடப்பட்டு வந்த சிறுமிகளில் ஒருவர் தனது தாயின் செல்போனுக்கு நேற்று இரவு போன் செய்தார். அப்போது தாங்கள் தூத்துக்குடியில் இருப்பதாகவும், தங்களை தேட வேண்டாம் என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    சிறுமிகள் போன் செய்த தகவலை அவர்களது பெற்றோர் போலீசிடம் தெரிவித்தனர். இதனையடுத்து சிறுமியின் தாய்க்கு அழைப்பு வந்த செல்போன் எண் சிக்னலை போலீசார் ஆராய்ந்துள்ளனர். அப்போது அந்த செல்போன் எண் தூத்துக்குடியில் இருப்பது தெரியவந்தது.

    அதுபற்றி தூத்துக்குடி இன்ஸ்பெக்டர் ஜோசுக்கு காரைக்குடி போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த செல்போன் சிக்னலை பின்பற்றி சிறுமிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தூத்துக்குடி போலீசார் களமிறங்கினர்.

    அப்போது சிறுமிகள் தூத்துக்குடி-சென்னை சாலையில் பயணித்து கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து எட்டயபுரம் அருகே பஸ்சில் சென்று கொண்டிருந்த சிறுமிகளை போலீசார் மீட்டனர். சிறுமிகள் மீட்கப்பட்ட தகவல் அவர்களது பெற்றோர் மற்றும் காரைக்குடி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் தூத்துக்குடி சென்றனர். சிறுமிகள் இருவருக்கும் போலீசார் அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமிகளை சென்னைக்கு அழைத்து சென்ற சிறுவனை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    சிறுமிகள் மாயமான விவகாரத்தில் விரைந்து செயல்பட்டு, அவர்களை மீட்ட தனிப்படை போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.

    Next Story
    ×