search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அகில இந்திய காவலர் துப்பாக்கி சுடும் போட்டியில் நூலிழையில் தங்கத்தை தவறவிட்ட திருச்சி பெண்
    X

    அகில இந்திய காவலர் துப்பாக்கி சுடும் போட்டியில் நூலிழையில் தங்கத்தை தவறவிட்ட திருச்சி பெண்

    • தங்கப்பதக்கம் கிடைத்திருந்தால் தமிழக அரசின் ரூ.5 லட்சம் ரொக்க பரிசு கிடைத்திருக்கும்.
    • மீண்டும் இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடத்துவார்கள்.

    திருச்சி:

    அகில இந்திய காவலர் துப்பாக்கி சுடுதல் போட்டி 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு செங்கல்பட்டு மாவட் டம் ஓதிவாக்கத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை பல்வேறு தரவரிசையில் உள்ளவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் மத்திய காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையை சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு போலீஸ் கமாண்டோ பிரிவில் திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த சோபியா லாரன் என்ற 42 வயது பெண் தலைமைக் காவலர் இடம் பெற்றார். தமிழ்நாடு போலீஸ் அணியில் இருந்து வந்துள்ள ஒரே பெண்மணி இவராக இருந்தார்.

    இவருக்கான போட்டி நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் முட்டி போட்டுக்கொண்டும், படுத்துக் கொண்டும், நின்று கொண்டும் இலக்கை நோக்கி சுட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

    அவருக்கான போட்டி நடைபெற்றபோது மதியம் 12.45 மணி ஆகிவிட்டது. இதனால் சூரிய வெளிச்சத்தில் அவரால் இலக்கை நோக்கி சுட முடியவில்லை. அனைத்து தோட்டாக்களும் நெற்றி பொட்டில் போய் உட்கார்ந்து விட்டதாக வேதனை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் போலீஸ்காரர் ஒருவர் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்று விட்டார்.

    இதுதொடர்பாக சோபியா கூறும்போது, மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்கினேன். ஆனால் இலக்கை தொட முடியவில்லை. தங்கப்பதக்கம் கிடைத்திருந்தால் தமிழக அரசின் ரூ.5 லட்சம் ரொக்க பரிசு கிடைத்திருக்கும்.

    மீண்டும் 2024-ம் ஆண்டு நடைபெறும் போட்டியில் பங்கேற்க தயார் செய்வேன். மீண்டும் இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடத்துவார்கள். அதில் வெற்றி பெற்றால் மாநில போட்டியில் பங்கேற்க வைப்பார்கள். அதில் முதலிடம் பெற்றால் தேசிய போட்டியில் பங்கேற்க முடியும். அடுத்த வருடம் நடைபெறும் தேசிய போட்டியில் தங்கம் வெல்ல இலக்கை நோக்கி பயணிப்பேன் என்றார்.

    Next Story
    ×