என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இஸ்ரேலில் பதுங்கு குழியில் தவிக்கும் திருச்சி பேராசிரியை: மீட்பு நடவடிக்கை தீவிரம்
    X

    இஸ்ரேலில் பதுங்கு குழியில் தவிக்கும் திருச்சி பேராசிரியை: மீட்பு நடவடிக்கை தீவிரம்

    • இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று இரவு ஒரு விமானம் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் செல்கிறது.
    • ராதிகாவை மீட்க மேலும் சில தினங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.

    திருச்சி:

    இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தன் வசம் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர் திடீர் போர் தொடுத்தனர்.

    இந்த அதிதீவிரப் போர் தற்போது உக்கிரமடைந்துள்ளது இதற்கிடையே இந்தியாவிலிருந்து இஸ்ரேல் சென்றுள்ள பலரும் போர் சூழலில் சிக்கி உள்ளனர்.

    திருச்சி பேராசிரியை சிறப்பு பயிற்சி பெறுவதற்காக சென்றிருந்த நிலையில் அங்கு சிக்கி உள்ளார்.

    திருச்சி கருமண்டபம் வசந்தம் நகரை சேர்ந்தவர் ராதிகா. இவர் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி இணை பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். சொட்டுநீர் பாசனம் குறித்த 3 வார பயிற்சிக்காக கடந்த செப்டம்பர் 23ம் தேதி காசாவிற்கு 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பென்குரியன் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். இவர் சென்ற சில நாட்களிலேயே போர் தொடங்கி விட்டது. இதனால் அங்குள்ள பதுங்கு குழி அமைப்பில் ராதிகா தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    இவர் தங்கி இருக்கும் இடத்தை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கிறது.

    இதற்கிடையே தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி ராதிகாவை பத்திரமாக இந்தியாவுக்கு மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசின் மூலம் மேற்கொண்டு வருகிறார்.

    மத்திய அரசு ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று இரவு ஒரு விமானம் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் செல்கிறது. இதில் இன்று 230 பேர் மீட்டு வரப்படுகிறார்கள்.

    இதில் ராதிகா இடம் பெற வாய்ப்பு இல்லை என தெரிய வந்துள்ளது. இஸ்ரேல் தலைநகரில் சிக்கி உள்ளவர்கள் முன்னுரிமை அடிப்படையில் முதலில் மீட்கப்பட இருக்கிறார்கள்.

    இவர் இஸ்ரேல் தலைநகரில் இருந்து வெகுதூரத்தில் காசா அருகாமையில் இருக்கிறார். அங்கிருந்து இஸ்ரேல் தலைநகருக்கு அழைத்து வந்து அதன் பின்னரே இந்தியாவுக்கு மீட்டு வர வாய்ப்புள்ளது. ஆகவே ராதிகாவை மீட்க மேலும் சில தினங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.

    பாதுகாப்பாக இருக்கும் பேராசிரியை ராதிகா விரைவில் மீட்கப்படுவார் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

    Next Story
    ×