என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பிரதமர் வருகைக்கு பின் தெப்பக்காடு யானைகள் முகாமில் குவியும் சுற்றுலா பயணிகள்
    X

    பிரதமர் வருகைக்கு பின் தெப்பக்காடு யானைகள் முகாமில் குவியும் சுற்றுலா பயணிகள்

    • பிரதமர் மோடி ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற பாகன் தம்பதியை பாராட்டி சென்றிருந்தார்.
    • மாயாறு கரையோரம் உள்ள காட்சி கோபுரத்தையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது குளு, குளு கால நிலை நிலவி வருகிறது. இந்த இதமான காலநிலையை அனுபவிக்க, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    அவ்வாறு வரும் பயணிகள் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்டு, பின்னர் முதுமலையில் உள்ள புலிகள் காப்பகத்திற்கு செல்வார்கள்.

    அங்குள்ள யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு, செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்வர். மேலும் வாகன சவாரி, யானை சவாரியும் செய்து மகிழ்ச்சி அடைவார்கள்.

    புலிகள் காப்பகத்திற்குள் வாகன சவாரி செய்து சென்று, அங்கு இருக்கும் பல்வேறு வகையான அரிய வகை வனவிலங்குகளை பார்வையிடுவார்கள்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 6-ந் தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டிருந்தது. யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

    பிரதமர் வந்து சென்ற பின்னர் நேற்று பிற்பகலில் முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலைக்கு வந்தனர்.

    அவர்கள் முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    பின்னர் வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் வளர்ப்பு யானைகளுக்கு உணவு கொடுப்பதை பார்த்து மகிழ்ந்து, யானைகள் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    நேற்று பிரதமர் மோடி முதுமலைக்கு வந்து வளர்ப்பு யானைகளை பார்வையிட்டதுடன், அவற்றுக்கு உணவு வழங்கி, ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற பாகன் தம்பதியை பாராட்டி சென்றிருந்தார்.

    இதையடுத்து சுற்றுலா பயணிகளும், பாகன் தம்பதியை நேரில் சந்தித்து பாராட்டி அவர்களுடன் செல்பி புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    தொடர்ந்து மாயாறு கரையோரம் உள்ள காட்சி கோபுரத்தையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து மாயாற்றின் இயற்கை அழகையும் கண்டு ரசித்தனர்.

    மேலும் வாகன சவாரி செய்து வனத்திற்குள் சென்று, வனவிலங்குகளையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர். பிரதமர் வருகையை தொடர்ந்து தெப்பக்காடு முகாமில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அங்குள்ள விடுதிகள், உணவகங்களும் திறக்கப்பட்டு விட்டது. இன்றும் தெப்பக்காடு யானைகள் முகாமில் அதிக சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்.

    Next Story
    ×