என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சொந்த ஊர் திரும்பிய அரசியல் கட்சி நிர்வாகிகள்
- தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஈரோட்டில் உள்ள அனைத்து சாலைகளிலும் கார்களின் அணிவகுப்பாகவே இருந்தது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் பணியாற்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சியினர் வருகை தந்து தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரும்பாலான அரசியல் கட்சியினர் ஈரோட்டையொட்டிய புறநகர் பகுதிகளில் தோட்டங்களில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். அவர்கள் பிரசார நேரம் தவிர மற்ற நேரங்களில் அங்கு நடைபயிற்சி செய்தும், கிணற்றில் நீச்சல் அடித்து குளித்தும் உற்சாகம் அடைந்துவருகின்றனர்.
மேலும் 3 வேளையும் சமையல்காரர்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு சுடச்சுட உணவு கொடுக்கப்பட்டு வருகிறது. காலையில் சாப்பிட்டு விட்டு பிரசாரத்துக்கு செல்லும் கட்சியினர் மதியம் மீண்டும் தங்கியுள்ள இடங்களுக்கு வந்து சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் மாலையில் பிரசாரத்துக்கு புறப்பட்டு சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று இரவு பிரசாரம் முடிந்ததும் பல்வேறு கட்சி நிர்வாகிகளும் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
இதனால் ஈரோட்டில் உள்ள அனைத்து சாலைகளிலும் கார்களின் அணிவகுப்பாகவே இருந்தது. இதுகுறித்து அரசியல் கட்சியினர் கூறும்போது, இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சொந்த ஊருக்கு கிளம்பி செல்கிறோம். மீண்டும் நாளைக்கு வந்துவழக்கம் போல பிரசாரம் மேற்கொள்வோம் என்றனர்.






