என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பேச்சிப்பாறை அணையில் மறுகால் வழியாக திறந்து விடப்பட்ட காட்சி.
திற்பரப்பில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்- அணைகளின் நீர்மட்டம் 24 மணி நேரமும் கண்காணிப்பு
- கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.79 அடியை எட்டியது.
நாகர்கோவில்:
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குமரி மாவட்டத்திலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சிற்றார்-1-ல் அதிகபட்சமாக 14 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வருவதையடுத்து அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இன்று காலையில் தண்ணீர் சிறுவர் பூங்காவை தாண்டி பாய்வதால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு அந்த பகுதியில் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.56 அடியாக இருந்தது.அணைக்கு 1602 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மதகுகள் வழியாக 791 கன அடி தண்ணீரும், உபரிநீராக 1024 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.79 அடியை எட்டியது. அணைக்கு 893 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சிற்றார்-1 அணை நீர்மட்டம் 13.32 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 13.41 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 18 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 49.21 அடியாகவும் உள்ளது.






