என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
தோவாளை சந்தையில் ஓணம் பண்டிகைக்காக 150 டன் பூக்கள்
- கேரள மக்கள் வருகை குறைவு காரணமாக சுமார் 50 டன் பூக்கள் மட்டுமே ஓணம் பண்டிகைக்கு விற்பனையானது.
- இந்த ஆண்டு ஓணம் பண்டிகையின்போது தோவாளை பூ சந்தை களைகட்டும் என்று வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஆரல்வாய்மொழி:
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் புகழ்பெற்ற பூச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மாவட்டம் முழுவதும் அல்லாமல், மாநிலத்தின் பிற மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிக அளவில் பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை வருகிறது. இந்த பண்டிகையின்போது மலையாள மொழி பேசும் மக்கள் வாழுகின்ற இடங்களில் எல்லாம் மாவேலி மன்னனை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலமிட்டு அறுசுவை உணவு படைத்து வழிபடுவது வழக்கம்.
குமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவது உண்டு. இதனால் தோவாளை பூ சந்தையில் பூக்கள் விற்பனை களை கட்டி காணப்படும். கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் தோவாளை வந்து பூக்களை வாங்கிச் செல்வது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த சந்தையில் போதிய விற்பனை இல்லாததால் வியாபாரிகள் அவதிக்கு உள்ளானார்கள். 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக சந்தை செயல்படவில்லை.
கடந்த ஆண்டு சந்தை செயல்பட்டாலும் கேரள மக்கள் வருகை குறைவு காரணமாக சுமார் 50 டன் பூக்கள் மட்டுமே ஓணம் பண்டிகைக்கு விற்பனையானது.
இந்த ஆண்டு அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால், தோவாளை சந்தையில் பூக்கள் விற்பனை சிறப்பாக இருக்கும் என வியாபாரிகள் கருதுகின்றனர். இதன் காரணமாக சுமார் 150 டன் பூக்களை சந்தைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
ஆரல்வாய்மொழி, தோவாளை, குமாரபுரம், வடக்கன்குளம், புதிய புத்தூர் மாடநாடார் குடியிருப்பு ஆகிய பகுதிகளிலிருந்து பிச்சிப்பூவும், தோவாளை, செண்பகராமன்புதூர், குமாரபுரம் ஆகிய ஊர்களில் இருந்து அரளி பூ, ராஜாவூர், மருங்கூர் ஆகிய ஊர்களிலிருந்து கோழி பூ, தோவாளையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சம்பங்கி பூ, சங்கரன்கோவில், ராஜபாளையம், வத்தலக்குண்டு, மதுரை, மானாமதுரை, கொடை ரோடு ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகை பூ போன்றவை தோவாளை சந்தைக்கு வர உள்ளது.
சேலத்திலிருந்து அரளி பூ, மஞ்சள் கேந்தி, பெங்களூரு மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து பட்டர்ரோஸ். அம்பாசமுத்திரம், புளியங்குடி, தென்காசி ஆகிய ஊர்களில் இருந்து கொழுந்து, மரிக்கொழுந்து, துளசி ஆகியவை ஏற்கனவே சந்தைக்கு வந்து விற்பனையாகி வருகிறது. ஓணம் பண்டிகையை கருத்தில் கொண்டு இறக்குமதி அளவை வியாபாரிகள் அதிகரித்து உள்ளனர்.
தோவாளை சந்தைக்கு கொண்டு வர ஒரு சில இடங்களில் பூக்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் இருப்பதால் வியாபாரிகளும் உற்பத்தியாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். எனவே இந்த ஆண்டு ஓணம் பண்டிகையின்போது தோவாளை பூ சந்தை களைகட்டும் என்று வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.








