search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூய பனிமயமாதா பேராலய தங்கத்தேரோட்டம்- பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
    X

    தூய பனிமயமாதா பேராலய தங்கத்தேரோட்டம்- பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

    • தூய பனிமயமாதா பேராலயத்தின் தங்கத்ரோரோட்ட திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • விழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற தூய பனிமயமாதா பேராலயம் தேர்திருவிழா மற்றும் தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு தங்கத்தேர்பவனி இன்று நடைபெற்றது.

    தூய பனிமயமாதா பேராலயத்தின் 441-ம் ஆண்டு திருவிழா மற்றும் 16-வது தங்கத்தேர் திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாள் காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும், 7 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்று பேராலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டது. மதியம் 12 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தங்கத்தேர் பவனி இன்று நடைபெற்றது.

    விழாவையொட்டி நேற்று மாலை பெருவிழா மாலை ஆராதனையும், இரவில் பேராலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனியும் நடைபெற்றது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு பங்கு தந்தை குமார்ராஜா நடத்திய முதல் திருப்பலி, 5.15 மணிக்கு பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலியும், காலை 7 மணிக்கு தங்கத்தேர் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. தங்கதேர் திருப்பலியை கோவா உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் பிலிப் நேரி நடத்தினர். அதுபோல் தங்கத்தேர் பவனியை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ், இலங்கை மன்னார் பிஷப் இம்மானுவேல் பர்னான்டோ ஆகியோர் ஜெபம் செய்து தொடங்கி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து முக்கிய வீதிகளில் அன்னையின் தங்கத் தேர் பவனி நடைபெற்றது. மதியம் 12.30 மணிக்கு தங்கத் தேர் நன்றி திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு 82-வது நிகழ்ச்சியாக பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது.

    இந்த விழாவில் இந்தியா முழுவதும் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தம் என பல்லாயிரக்கணக்கானோர் மக்கள் பங்கேற்று உள்ளனர். அப்போது அவர்கள் மரியே வாழ்க.. பனிமய தாயே வாழ்க.. பார் போற்றும் அரசியை வாழ்க என விண்ணதிர கோஷமிட்டனர். விழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

    தூய பனிமயமாதா பேராலயத்தின் தங்கத்ரோரோட்ட திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி பனிமய மாதா பேராலய தங்கத்தேர் பவனியை முன்னிட்டு நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ் குமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியிறக்க விழா, நன்றி அறிவித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருவிழாவில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ்குமார், உள்பட இறைமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×