என் மலர்
தமிழ்நாடு

சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு பணி வழங்காவிட்டால் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து விரைவில் போராட்டம் நடத்தப்படும்- திருமாவளவன்
- சுங்கச்சாவடி ஊழியா்களை திருமாவளவன் எம்.பி. சந்தித்து, அவா்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
- பணி நீக்கம் செய்யப்பட்ட சுங்கச்சாவடி ஊழியா்களை மீண்டும் பணியமா்த்த வேண்டும்.
அகரம்சீகூர்:
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறையில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடியில் பணிபுரிந்த 28 ஊழியர்களை தனியாா் ஒப்பந்த நிறுவனம், எவ்வித முன்னறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்தது.
ஆள் குறைப்பு நடவடிக்கை என்ற பெயரில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி இரவு பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் பணியின்றி நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதையடுத்து, பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பணியாளா்களை மீண்டும் நிரந்தரமாக பணியமா்த்தக் கோரியும் ஏ.ஐ.டி.யு.சி. சங்க கிளை தலைவா் ஏ.ஆா்.மணிகண்டன் தலைமையில், சுங்கச்சாவடி அலுவலக வளாகத்தில் கடந்த 1-ந்தேதி முதல் தொடா்ந்து பல்வேறுகட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது அகிம்சை முறையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள ஊழியர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் வரக்கூடாது, உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு சுங்கச்சாவடி ஊழியா்களை திருமாவளவன் எம்.பி. சந்தித்து, அவா்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
பணி நீக்கம் செய்யப்பட்ட சுங்கச்சாவடி ஊழியா்களை மீண்டும் பணியமா்த்த வேண்டும். இப்பிரச்னைக்கு தீா்வு காண சம்பந்தப்பட்ட துறை, மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளேன். டோல்கேட் ஊழியர்கள் பணி நீக்க பிரச்சிைனக்கு உரிய தீா்வு ஏற்படவில்லை என்றால், அனைத்துக் கட்சியினரையும் ஒன்றிணைத்து, விரைவில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.