என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாணவிகளை பட்டாசு வெடித்து வரவேற்ற ஆசிரியர்கள்
- கராத்தே போட்டியை பொறுத்தவரை இரண்டு வகை உண்டு.
- ஈரோட்டில் மாவட்ட அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தங்கம் வென்றேன்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 பள்ளி மாணவிகள் மாநில அளவிலான சப் -ஜூனியர் கராத்தே போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். இதுப் பற்றிய விவரம் வருமாறு:-
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதி கே. கே. நகர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (45). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி செந்தாமரை. இவர்களுக்கு நேகா ஸ்ரீ(11), ஹரிணி ஸ்ரீ(10) என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதில் ஹரிணிஸ்ரீ பெருந்துறையில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இதேப்போல் கோபிசெட்டிபாளையம் அடுத்த வெள்ளாங்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். கூலி தொழிலாளி. இவரது மனைவி கலையரசி. இவர்களது இளைய மகள் கீர்த்திகா(8). வெள்ளாங்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவிகள் ஹரிணி ஸ்ரீ, கீர்த்திகா இருவரும் சென்னையில் கடந்த 5 மற்றும் 6-ந் தேதிகளில் மாண்போர்ட் பள்ளியில் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில் நடந்த 38-வது மாநில அளவிலான சப்- ஜூனியர் கராத்தே போட்டியில் ஈரோடு மாவட்ட கராத்தே அணி சார்பில் குமித்தே எனப்படும் சண்டை பிரிவில் கலந்துகொண்டு 2 வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவிகள் இருவரும் சென்னையில் இருந்து ஈரோட்டிற்கு வந்தனர். அவர்களை பள்ளி தலைமை ஆசிரியை கோமதி தலைமையில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
வெள்ளி பதக்கம் வென்ற மாணவி ஹரிணி ஸ்ரீ கூறும்போது,
சிறுவயது முதலே கராத்தே மீது எனக்கு அலாதி பிரியம் ஏற்பட்டது. இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு கொடுமைகள் நடைபெற்று வருகிறது. பெண்கள் தங்களுக்கு வரும் பிரச்சனைகளை துணிந்து தைரியமாக சந்திக்க வேண்டும். அதற்காக நான் கராத்தே கற்க ஆசைப்பட்டேன்.
இது குறித்து எனது தந்தையிடம் கூறினேன். அவரும் எனது ஆசையை புரிந்து கொண்டு எனக்கு உதவி புரிந்தார். நான் கடந்த இரண்டு மாதமாக வெள்ளாங்கோவில் பகுதியில் உள்ள கராத்தே அகாடமியில் பயிற்சியாளர் பரமேஸ்வரன் என்பவரிடம் முறையாக பயிற்சி எடுத்து வருகிறேன். தினமும் அதிகாலை 5.30 முதல் 7.30 மணி வரை கராத்தே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
கடந்த மாதம் ஈரோட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் பிரவுன் மெடல் வாங்கினேன். இதுதான் எனது முதல் கராத்தே போட்டியாகும். அதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சப் ஜூனியர் கராத்தே போட்டியில் குமித்தே பிரிவில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்றேன். இந்த வெற்றி எனக்கு மிகப் பெரிய ஊக்கத்தை தந்துள்ளது. அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவில் நடைபெறும் கராத்தே போட்டிக்காக தயாராகி வருகிறேன். ஒலிம்பிக் போட்டியில் கராத்தேவில் தங்கம் வெல்வதே எனது வாழ்நாள் லட்சியம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நான் வெள்ளாங்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறேன். எனக்கு சிறுவயது முதலே விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டு. எங்கள் பள்ளியைச் சேர்ந்த கலைவாணி என்ற அக்கா கராத்தே போட்டியில் மாவட்ட, மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை குவித்துள்ளார். அவரைப் பார்த்து எனக்கு கராத்தே போட்டி மீது ஆர்வம் ஏற்பட்டது. இது குறித்து எனது தந்தையிடம் தெரிவித்தேன் அவரும் ஒப்புக்கொண்டார்.
கடந்த ஒரு வருடமாக வெள்ளாங்கோவிலில் உள்ள கராத்தே அகடாமியில் பயிற்சியாளர் பரமேஸ்வரன் என்பவரிடம் கராத்தேவை முறையாக கற்று வருகிறேன். ஈரோட்டில் மாவட்ட அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தங்கம் வென்றேன். இதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியர் கராத்தே போட்டியில் குமித்தே பிரிவில் பங்கேற்று வெள்ளி பதக்கம் பெற்றேன். இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு தற்காப்பு கலை மிகவும் அவசியம். அதற்காக நான் கராத்தே தேர்ந்தெடுத்து தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறேன். ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக பங்கேற்று தங்கப் பதக்கம் வெல்வதே எனது வாழ்நாள் லட்சியமாகும் என்று தன்னம்பிக்கையுடன் கூறினார்.
இது குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளித்த பரமேஸ்வரன் கூறியதாவது,
கராத்தே போட்டியை பொறுத்தவரை இரண்டு வகை உண்டு. ஒன்று கட்டா. மற்றொன்று கும்மித்தே. கட்டா என்றால் கற்பனை திறன் உடைய சண்டை. அதாவது எதிரில் ஆள் இருப்பது போன்று கற்பனை செய்து கொண்டு சண்டையிட வேண்டும். குமித்தே என்றால் நேரடியாக சண்டையில் ஈடுபடுவது. மாணவிகள் ஹரணி ஸ்ரீ, கீர்த்திகா இருவரும் குமித்தே பிரிவில் தீவிர பயிற்சி மற்றும் கடின உழைப்புடன் சாதித்து காட்டியுள்ளனர். இனி வரக்கூடிய அனைத்து போட்டிகளிலும் மாணவிகள் வெற்றி பெற அவர்களுக்கு தீவிரப் பயிற்சி அளிக்கப்படும். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு தற்காப்பு கலையை கற்று வைப்பது நல்லது தான். இரு மாணவிகளுக்கும் அவர்களது பெற்றோர் உறுதுணையாக இருந்து வருகின்றனர். வறுமையான சூழ்நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு பெற்றோர் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






