search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாழப்பாடியில் குழந்தை பெற்ற சிறுமி மரணம்- விதிமீறி பிரசவம் பார்த்த பெண் டாக்டர் கைது
    X

    கைதான டாக்டர் செல்வாம்பாள்.

    வாழப்பாடியில் குழந்தை பெற்ற சிறுமி மரணம்- விதிமீறி பிரசவம் பார்த்த பெண் டாக்டர் கைது

    • சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான செல்வாம்பாள் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • சேலம் போக்சோ நீதிமன்றம் செல்வாம்பாளை கைது செய்து 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி இந்திரா நகரை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான 22 வயது இளைஞர் ஒருவருடன் நெருங்கி பழகியதில் கர்ப்பமானார்.

    இதனால் சிகிச்சைக்காக வாழப்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கடந்த 6-ந்தேதி சிறுமி சென்றார். சிறுமியின் வயிற்றில் 7 மாதத்திற்கு மேல் கரு வளர்ந்து விட்டதால், அந்த குறை மாத குழந்தையை, டாக்டர் செல்வாம்பாள் பிரசவிக்க செய்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    அதே சமயம் குழந்தையை பிரசவித்த பிறகு சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மறுநாள் (7-ந்தேதி) அதிகாலையில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனிடையே சிறுமிக்கு பிறந்த சிசுவை ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி ஆட்கள் இல்லாத பகுதியில் வீசப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த மருத்துவ குழுவினர் சிசுவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் வளர்மதி, வாழப்பாடி அரசு தலைமை மருத்துவர் ஜெயசெல்வி, பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், டி.எஸ்.பி. ஹரிசங்கரி உள்ளிட்டோர் டாக்டர் செல்வாம்பாளிடம் விசாரணை நடத்தினர்.

    அதனை தொடர்ந்து, திருமணமாகாத சிறுமிக்கு பிரசவ சிகிச்சை அளித்த டாக்டர் செல்வம்பாள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, வாழப்பாடி அரசு தலைமை டாக்டர் ஜெயசெல்வி வாழப்பாடி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான செல்வாம்பாள் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதுகுறித்து தகவல் தெரியவந்ததால் சோர்ந்து காணப்பட்ட செல்வாம்பாள், இரு தினங்களுக்கு முன் வாழப்பாடியிலுள்ள அவரது மருத்துவமனையிலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சேலம் போக்சோ நீதிமன்றம், செல்வாம்பாளை கைது செய்து 15 நாள் சிறையில் அடைக்க நேற்று உத்தரவிட்டது. இதனால் போலீசார், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டாக்டர் செல்வாம்பாளை நேற்றிரவு கைது செய்தனர். போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையிலே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    அதுபோல் சிறுமி கர்ப்பத்துக்கு காரணமான வாலிபர் மீதும் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×