search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு இன்று இரவு வந்து சேரும்- அதிகாரிகள் தகவல்
    X

    கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு இன்று இரவு வந்து சேரும்- அதிகாரிகள் தகவல்

    • ஒரே நாளில் அணை நீர்மட்டம் 5 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.
    • கபினி அணை விரைவில் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    கேரள மாநிலம் வயநாடு, கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    அணைக்கு நேற்று காலை 29 ஆயிரத்து 552 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் மாலையில் 44 ஆயிரத்து 436 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. அணையில் இருந்து 5,452 கன அடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டுள்ளது.

    124 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 92 அடியாக இருந்த நிலையில் நேற்று 97.5 அடியாக உயர்ந்தது. இதனால் ஒரே நாளில் அணை நீர்மட்டம் 5 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.

    இதேபோல் கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 79.50 அடியாக இருந்தது. அணை நிரம்ப இன்னும் 5 அடி மட்டுமே பாக்கி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 21,600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணை விரைவில் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

    2 அணைகளில் இருந்தும் கடந்த சில நாட்களாக 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று முதல் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 15 ஆயிரத்து 452 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது.

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்பட்ட நீர் இன்று பிற்பகல் தமிழக கர்நாடக எல்லையான பிலி குண்டலு வந்து சேருமென எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையும் அதே அளவில் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் வந்து சேரும் பட்சத்தில் ஒகேனக்கல்லில் இன்று பிற்பகல் முதல் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தமிழக கர்நாடக எல்லையான பிலி குண்டுலு பகுதியில் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் 6 மணி நேரத்தில் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் கர்நாடக அணைகளில் இருந்து விடப்பட்ட தண்ணீர் இன்று இரவு மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என தெரிகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 165 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 119 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர்மட்டம் 66.86 அடியாக உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இனிவரும் நாட்களில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் மேட்டூருக்கு வந்து சேரும் என்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

    Next Story
    ×