search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவில் நிலத்தை மீட்க கோரி  வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்
    X

    கோவில் நிலத்தை மீட்க கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்

    • கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் தரிசு நிலம் இருந்து வருகிறது.
    • கோவில் நிலத்தை பொதுமக்கள் மத்தியில் ஏலம் விட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த அரக்காசனள்ளி கிராமத்தில் பல்வேறு சமூகத்தைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் தரிசு நிலம் இருந்து வருகிறது. இந்த நிலத்தை முறைகேடாக ஆவணங்களை பெற்று ஆக்கிரமிப்பு செய்து 4 பேர் விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த கோவில் நிலத்தை பொதுமக்கள் மத்தியில் ஏலம் விட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். மேலும் இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

    இதற்கிடையே நேற்று நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட கலெக்டர் அலுவலத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அப்போது கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் விசாரணை செய்ய அறிவுறுத்தினார். தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கிராம மக்களிடையே விசாரணை நடத்தினார்.

    இந்த கோயில் நிலம் தொடர்பாக நீதிமன்ற வழக்கு இருப்பதால், இதில் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது என மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கோவில் நிலத்தை மீட்டுத் தரவில்லை என்றால் குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை திரும்ப அரசிடமே ஒப்படைக்க போகிறோம் என தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா ஆவணங்களை எங்கே வேண்டுமானாலும் வீசி விட்டுச் செல்லுங்கள், நாங்கள் எதுவும் பண்ண முடியாது என தெரிவித்துள்ளார். இதனால் கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வீசிவிட்டு சென்றனர்.

    இந்த நிலையில் கோவில் நிலத்தை மீட்க கோரி இன்று அரக்காசனள்ளி கிராமத்தில் உள்ளவர்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் குடும்பங்களுடன் ஒட்டுமொத்த ஊரையும் காலி செய்துவிட்டு வெளிமாநிலங்களுக்கு அகதிகளாக வெளியேறுவோம் என தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த கிராம பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×