என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் ஈரோட்டில் தீவிரமடையும் வாகன சோதனை
- பணம் பட்டுவாடா தொடர்பாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
- துணை ராணுவத்தினர் போலீசாருடன் இணைந்து வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழுக்கள், 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் ஈரோடுக்கு அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பணம் பட்டுவாடா தொடர்பாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதனைத் தொடர்ந்து தேர்தலில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி 5 கம்பெனி துணை ராணுவ படை வீரர்கள் ஈரோடுக்கு வருகை தந்துள்ளனர். ஒவ்வொரு குழுவில் 80 பேர் வீதம் 400-க்கும் மேற்பட்டவர்கள் வந்து விட்டனர். இது தவிர தமிழ்நாடு சிறப்பு காவல் படை வீரர்கள் 160 பேரும் வந்தனர்.
துணை ராணுவத்தினர் போலீசாருடன் இணைந்து வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை சோதனை சாவடி மிக முக்கிய சோதனை சாவடி ஆக உள்ளது. ஈரோட்டில் இருந்து சேலம், நாமக்கல், சென்னை போன்ற ஊர்களுக்கும் அந்த ஊரில் இருந்து ஈரோடு வருவதற்கும் இந்த சோதனை சாவடி முக்கிய பகுதியாக உள்ளது.
இதனால் இங்கு பறக்கும் படையினர், போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து வருகின்றனர். கார்கள், லாரிகளை நிறுத்தி சோதனை செய்து வந்த நிலையில் நேற்று முதல் பஸ்களில் வரும் பயணிகளையும் சோதனை செய்ய தொடங்கியுள்ளனர். சோதனை சாவடி வழியாக செல்லும் பஸ்களை நிறுத்தி பஸ்களுக்குள் பறக்கும் படையினர் துணை ராணுவத்தினர், மற்றும் போலீசார் சென்று ஒவ்வொரு பயணிகளின் உடைமைகளையும் தீவிரமாக சோதனை செய்கின்றனர். அதன் பிறகே பஸ் ஈரோடு நகருக்குள் அனுமதிக்கப்படுகிறது.
இதே போல் ஈரோடு மாநகர பகுதியில் 12 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் துணை ராணுவத்தினர் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து வருகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால் சோதனையை தீவிர படுத்தியுள்ளனர்.






