search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உசிலம்பட்டியில் இன்று சாலையில் பாலை கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்
    X

    உசிலம்பட்டியில் இன்று சாலையில் பாலை கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்

    • பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

    உசிலம்பட்டி:

    பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து 1 லட்சத்து 86 ஆயிரத்து 200 லிட்டர் பால் மதுரையில் உள்ள ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் நிரப்பி மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

    பால் கொள்முதல் விலையை ரூ.7-ல் இருந்து ரூ.10 வரை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர். தனியார் பால் நிறுவனங்கள் அரசு வழங்கும் கொள்முதல் விலையை விட அதிகமாக வழங்குகிறது. எனவே ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்கள் நலனை விரும்பி உடனே கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.

    இதற்கு அரசு உடனடி நடவடிக்கை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் கடந்த வாரம் முதல் ஆவினுக்கு பால் அனுப்புவதை நிறுத்தும் போராட்டத்தை நடத்து கின்றனர். இதனால் மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

    இந்த நிலையில் உசிலம்பட்டி அருகே சக்கரைப்பட்டி கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் இன்று காலை மதுரை-செல்லம் பட்டி மெயின் ரோட்டில் திரண்டனர். அவர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி பாலை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பால் உற்பத்தியாளர்களின் இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாளுக்கு நாள் மாடுகளுக்கு தீவனம், பராமரிப்பு பணிக்காக செலவுகள் அதிகரித்து வருகிறது. இந்த செலவுகளை எங்களால் எதிர்கொள்ள முடியவில்லை. எனவே பால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கொள்முதல் விலையை அரசு உயர்த்தி தர வேண்டும் என்றனர்.

    Next Story
    ×